Saturday, July 2, 2011

காதலாகி கசிந்துருகி - பகுதி 9


-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 9

----------------------------------------------------------------------------------------------------------

முக்கியக் குறிப்பு: இக்கதையின் இப்பகுதியை மனம் பலவீனமானவர்களும், எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவர்களும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கல்லும் கரையும் வண்ணம் இப்பகுதி மிக உருக்கமாக இருக்கும். இதைப் படித்து கண்ணீர் சிந்தாதவர்களே இருக்கமாட்டார்கள்.

வாழ்க்கை அமைதியான வழிமுறையாக மட்டுமே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும். அந்தோ பரிதாபம்…! வாழ்க்கை அவ்வாறு இருப்பதில்லை… மனவலியுடன் காதலை மறைத்து வாழ்ந்தாலும் ராஜேஷும் அர்ஜூனும் ஒருவருடன் ஒருவர் பழகி இன்பமாக வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் வாழ்க்கை விதியெனும் சுழலில் சிக்கிய படகாக இப்போது ஆனது.
மழையின் இரவில் விழுந்துகிடந்த அந்த இரு உடல்களில் ஒரு உடலில் மட்டும் கட்டாயம் உயிர் இருந்தது. அவன் ராஜேஷ்…. கண்களை மெல்லத் திறந்து அந்தகாரத்தை எதிர்கொண்டான். மெதுவாக… மிக மெதுவாக… அவனுக்கு நினைவு திரும்பியது. அதில் முதலில் பட்ட உணர்ச்சி, அர்ஜூனுக்கு என்ன ஆனது? என்ற கேள்விதான். ராஜேஷ் கண்களைச் சுருக்கி, கனமாக இருந்த தன் தலையை தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அதோ…. அங்கே அர்ஜூனின் உடல்…. அதைச் சுற்றிலும் மழை நீர் தேங்கி இருப்பது போல் தேங்கியிருக்கிறதே… அது என்ன? ஆஆ…. அது அவன் ரத்தம்.
என் அர்ஜூனின் ரத்தம்…. ராஜேஷ் சட்டென எழுந்திருக்க முயன்றான். ஆனால் அவனால் கால்களை அசைக்க இயலவில்லை. வலது கால் கட்டாயம் முறிந்திருக்க வேண்டும். ஆயினும் அவன் விடவில்லை. உடலைத் தேய்த்துக் கொண்டே, அர்ஜூன் அருகில் சென்றான். ராஜேஷின் மனம் என்றுமில்லா வலியில் துடித்தது…
அர்ஜூன்… தயவு செய்து என்னை விட்டுச் சென்றுவிடாதே… இதோ கண்ணை திறந்து என்னைப் பார்…. நான் உன்னிடத்தில் சொல்ல இன்னும் சில விஷயங்கள் உள்ளன… அர்ஜூன்… என்னைப் பார் அர்ஜூன்… நான் உன்னை என் உயிரில் சுமந்து தவிப்பதைப் பார் அர்ஜூன்… ஆஆஆ…. எவ்வளவு ரத்தம்… என் அர்ஜூனின் ரத்தம்…. அர்ஜூன்… அர்ஜூன்… நீ இல்லாமல் என்னை நடைபிணமாக்கி விடாதே… அர்ஜூன்
ராஜேஷின் மனம் கதறிய வார்த்தைகள் எதுவும் அவன் வாயில் வரவில்லை. அவன் அழுத ஓலம் மட்டுமே அவன் தொண்டையில் இருந்து வெளிப்பட்டது. அவன் அர்ஜூனின் கன்னங்களைத் தொட்டான்.. தலையை சற்று அசைத்தான்… அவன் முகம் எந்த உணர்ச்சியும் இல்லாது, கண்கள் இறுக மூடி… அர்ஜூன் அங்கே ஒரு கிழிந்த துணியைப் போல கிடந்தான்…. ராஜேஷின் ஆடைகள் முழுவதும் அர்ஜூனின் ரத்தத்தால் தோய்ந்தன.
யாரோ ஓடி வரும் ஓசை கேட்டது. யாரோ ராஜேஷைத் தூக்கினார்கள்… சிலர் அர்ஜூனைத் தூக்கினார்கள்… அவன் தலையில் இருந்து ரத்தம் ஒழுகியது… ராஜேஷுக்கு இதயம் பிசைந்தது. கட்டாயம் அர்ஜூன் மறைந்துவிட்டான். தன் வாழ்க்கை என்றும் ஈடுசெய்ய இயலாத இழப்பை சந்தித்து விட்டது. ராஜேஷ் அப்போதே செத்துவிடவேண்டும் என நினைத்தான். இந்தப் பாழும் உயிர் அவன் உடலை விட்டு அவ்வளவு எளிதாகச் சென்று விடாது. அவன் இன்னும் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டுமல்லவா… ராஜேஷும் அர்ஜூனும் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
ராஜேஷ் இருந்த அறையில் காக்கிச் சட்டைக்காரர்கள்… ராஜேஷையும் அர்ஜூனையும் அவர்கள் தெரிந்து கொண்டனர். சம்பந்தப்படவர்களுக்கு உடனே தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. ராஜேஷ் மயக்க நிலையில் இருந்தான். சற்று மயக்கம் தெளிவது போல் இருக்கும்…. ஆனால் கால்கள் வலி கடுமையாக இருக்கும்… திடீரென மயக்கம் வரும். ஒவ்வொரு முறை அவனுக்கு மயக்கம் தெளியும் போதும் அவன் தெரிந்து கொள்ள நினைத்தது ஒன்றே ஒன்று தான்…. அது அர்ஜூனைப் பற்றிதான். ஆனால் அதை விசாரித்துக் கேட்கும் அளவிற்கு அவன் நினைவு இருப்பதில்லை. மேலும் அவனால் பேசும் அளவிற்கு குரலை எழுப்ப இயலவில்லை. அவன் உடல் மிக சோர்ந்திருந்தது. அவன் உள்ளமோ ஏறக்குறைய இறக்கும் தருவாயில் இருந்தது.
மறுநாள் காலையில் ராஜேஷுக்கு ஓரளவு நினைவு திரும்பியது. அவனருகில் அவன் சின்ன அண்ணன் நின்றிருந்தான்… ராஜேஷ் தன் அண்ணனை அருகில் அழைத்தான்.
“அ….அ….அண்ணா…. அ…அர்..அர்ஜூன்”.. மிக மெல்லிய குரலில் அவன் சொன்னான். அவன் உள்ளம் வேகமாக இரைந்தது.
“ராஜேஷ்… நீ அமைதியா இரு…. இப்ப கஷ்டப்பட்டு பேசாத… அர்ஜூன் பக்கத்து வார்ட்ல தான் இருக்கான்… இன்னும் அபாய கட்டத்த தாண்டல… நிறைய ரத்தம் போயிருச்சு… பிழைக்கறது கஷ்டம்னு டாக்டர் சொல்றாரு…”, ராஜேஷின் அண்ணன் சொன்னான். அவனுக்குத் தெரியும் ராஜேஷும் அர்ஜூனும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று.
ராஜேஷ் உடல் அசைவற்று கிடந்தாலும் அவன் தன் உணர்ச்சிகளையும் ஆற்றலையும் அப்படியே ஒன்று திரட்டிக் கொண்டிருந்தான். அவன் எழுந்து சென்று அர்ஜூனைப் பார்க்க வேண்டும். ஆனால் யாரும் அவனுக்கு உதவ மாட்டார்கள். அவன் இன்னும் ஒருநாள் இந்த வேதனையில் தவிக்கத்தான் வேண்டும். ஒருவேளை அதற்குள் அர்ஜூன் சென்றுவிட்டால், தன்னால் அவனைக் கடைசிவரை காணவே இயலாமல் போய்விடும். அவனுடைய அந்த அழகிய, குழைந்தைத்தனமான முகத்தை காணாமல் ராஜேஷால் மூச்சு கூட விட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அவனால் பொறுக்க இயலாமல், கட்டிலில் இருந்து எழுந்துவிட்டான். அவன் கால்களை கீழே வைத்தான். வலது கால் மட்டும் முறிந்திருந்தது. கட்டுகள் போடப்படிருந்தது. அண்ணிமார்கள் சொல்லியும் கேட்காமல், அவன் அர்ஜூன் இருக்கும் இடம் தேடி தன் ஒரு காலால் மெல்ல மெல்ல ஊன்றி கொண்டே சென்றான். இதோ… அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் அறை. கதவின் கண்ணாடி வழியாக அவன் உள்ளே பார்த்தான்.
அர்ஜூன்… ஒரு சிதைந்த சிற்பம் போல் அங்கே கிடந்தான். அவனைச் சுற்றிலும் அவன் உயிரைச் செலுத்திக் கொண்டிருக்கும் கருவிகள். அவன் முகமோ களையிழந்து உயிர் திறம் இழந்து, அமைதியின் சுவடுகள் இழந்து, அவன் உடல் முழுதும் சுற்றப்பட்டுள்ள கட்டுகள். ராஜேஷின் கண்களில் கண்ணீர் வெள்ளம். அன்றொருநாள், அர்ஜூனுக்கு உடம்பு சரியில்லாத் போது அவன் தூங்கும் அழகை ரசித்தவன், இன்று இதோ மரணப் படுக்கையில் இருக்கும் அர்ஜூனைப் பார்த்து பார்த்து அழுதான். அவனை யாரும் தடுக்கவில்லை. எல்லாருக்கும் தெரியும் அவர்கள் சிறந்த நண்பர்கள் என்று… ஆனால் ராஜேஷுக்கு மட்டும் தான் தெரியும், அர்ஜூன் அவன் உயிர் என்று…
என் அர்ஜூன் மென்மையானவன்… அவன் உடம்பில் இத்துணை கருவிகளா.. அவன் எவ்வளவு வலியால் தவிப்பானோ…. அவன் ரத்தம் முழுதும் வீணாகிவிட்டதா… அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான். அவன் பூவைப் போன்றவன்…. அவனை இந்த மார்பில் சாய்த்துக் கொண்டு உறங்க வேண்டும் என நினைத்தேனே…. அவனை விட்டு விடுங்கள்… அவனுக்கு ஒன்றுமில்லை…
ராஜேஷ் அந்தக் கண்ணாடியில் சாய்ந்து கொண்டு மணிக்கணக்காக அர்ஜூனைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் அர்ஜூனை வழியனுப்ப விரும்பவில்லை. அங்கிருந்து அவன் சென்றுவிட்டால், யமன் வந்து அர்ஜூனை அழைத்துக் கொண்டு சென்று விடுவான் என பயந்தான். அந்த அறைக்குக் காவலாக அங்கேயே இருந்தான். உணவு உண்ணவில்லை…. நீர் குடிக்கவில்லை.. யாருடனும் பேசவில்லை… அவன் பார்வை அர்ஜூனை விட்டு அகலவில்லை… அவன் கண்கள் கண்ணீர் பொழிவதை நிறுத்த வில்லை.
காதல் அவனை நிலைபெறச் செய்தது. அர்ஜூனையும் தான்… மருத்துவர் வந்து சொன்னார்…. இனி ஒரு பயமும் இல்லை. அர்ஜூனின் உடல் நிலையில் சீரான முன்னேற்றம். அவன் பிழைத்துவிடுவான். ஆனால் ராஜேஷ் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. ஒன்பது மணி நேரங்கள் அவன் அங்கேயே நின்றிருந்தான். அர்ஜூன் கண்விழித்து தன்னைப் பார்க்கும் வரை அவன் எதையும் நம்பத் தயாராயில்லை…
பின்னர் ராஜேஷ் மயங்கி விழுந்தான்… அவனை அவன் படுக்கையில் கிடத்தி அவனுக்கு வேண்டிய மருத்துவம் பார்த்தார்கள். மறுநாள் காலையில் ராஜேஷுக்கு நினைவு திரும்பிய போது அர்ஜூனுக்கும் நினைவு திரும்பியது. அர்ஜூன் கண் திறந்து பார்த்த போது அவனுக்கு தான் இருக்கும் இடமும் நிலையும் சற்றே புலப்பட்டது. அவனுக்கு ராஜேஷின் நினைவு வந்தது. ராஜேஷுக்கு என்ன ஆனது என்ற பயம் அவனைப் பீடித்தது. அந்த அறையின் கண்ணாடி கதவுகளின் வழியாக அவன் பார்த்தபோது அங்கே ராஜேஷின் அழுத விழிகளை அவன் பார்த்தான். அவனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது.
என் ராஜேஷ் நன்றாயிருக்கிறான்… நானும் நன்றாகிவிடுவேன்.
ராஜேஷ் மாத்திரம் அர்ஜூனைப் பார்க்க உள்ளே அனுமதிக்கப் பட்டான். பல உலக சரித்திரங்களும் காதற் காட்சிகளைக் கண்டிருக்கும். ஆனால் இங்கே இந்த அறையில் இப்போது நடக்கும் காட்சிகளைக் காண யாரும் சாட்சியாக இல்லை. சாட்சியும் தேவையில்லை. அர்ஜூனும் ராஜேஷும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த இரு ஆன்மாக்களும் தன் தூல உடம்பில் இருந்து வந்து தன் காதல் பரிமாற்றத்தை ஆரம்பித்தன. அவர்கள் கண்களின் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அங்கே வார்த்தைகள் பேசப்படவில்லை… அமைதி… பேரமைதி… ஆனால் இத்துணை நாட்களாக இருவரும் பேச நினைத்து பேசாமல் போன அனைத்தும் அங்கே பேசப்பட்டன, வார்த்தைகளால் அல்ல…. விழியின் ஒளிப்பரிமாற்றத்தால்…. ராஜேஷ் தன் காதலைச் சொன்னான்… விழியில்…. அர்ஜூன் அதை ஆமோதித்தான்… விழியில்… அவர்கள் இதயங்கள் இடம்மாறின.. உணர்ச்சிகள் தடம் மாறின… காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அன்பு பெருக்கெடுத்து அவர்கள் ஆன்மாக்களை மூழ்கடித்தது. அதன் வெளிப்பாடே விழிவெள்ளம். வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்….
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
  புண்கணீர் பூசல் தரும்.”
ஆம்… இந்த இருவரின் கண்ணீரும் இவர்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடு. அதில் காதல் பரிமாறப்பட்டது. ராஜேஷ் அர்ஜூனின் அருகில் சென்றான். தன் கைகளால் அவன் கன்ன்ங்களைத் தொட்டான். கண்ணீரைத் துடைத்தான். அர்ஜூன் தன் கண்களை மூடிக்கொண்டான். இது கனவல்ல என அவனுக்குத் தெரியும். தன் உயிருக்குயிரான காதலன் தன்னை இத்துணை நாளும் காதலித்தே வந்துள்ளான்.
இது போதும், இந்த இன்பமே எனக்கு அதிகம். இதோ என் உயிரைக் கேட்டாலும் கொடுத்து விடுவேன். என் ராஜேஷின் இதயத்தில் நான் இருக்கிறேன் என்ற இன்பமே போதும். அவன் மடிமீது உறங்கி விழிக்கும் நாட்கள் வேண்டும் தான்…. அவன் மார்பில் முகம் புதைத்துத் தூங்கும் நாட்கள் வேண்டும் தான்… அவன் இதழால் என் உச்சி முகரப்படும் நாட்கள் வேண்டும் தான்… அவன் அருகில் இருந்து கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் நாட்கள் வேண்டும் தான்… அவை எனக்கு கிடைக்குமா என்ன?
ராஜேஷ் கட்டிலில் அர்ஜூனின் அருகில் அமர்ந்தான். அவர்கள் இன்னும் பேசவில்லை… வார்த்தைகள் தேவையில்லை… அர்ஜூனின் மனம் நினைத்தது இப்போது ராஜேஷுக்குத் தெளிவாகக் கேட்டது.
அர்ஜூன்… நீ இத்துடன் முடிந்துவிட மாட்டாய்… அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்… நி என்னைச் சேர்ந்தவன்… என்னுடையவன்… எனக்கு மட்டும் தான் சொந்தம்… இன்னும் எத்துணையோ ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், ஆயிரம் பிறப்புகள் சென்றாலும், நீ எனக்குச் சொந்தம்… நான் உனக்குச் சொந்தம். என் மடிமீது நீ உறங்கி விழிக்கும் பொழுதுகள்தான் இனி எல்லாமே…. என் மார்பில் முகம் புதைத்து உறங்கும் பொழுதுகள் தான் இனி எல்லாமே…. என் இதழால் உன் உச்சு முகரந்தே நான் பொழுதுகளைக் கழிப்பேன்…. நீ என்னருகில் நான் உன்னருகில்… இருவரும் முகம்பார்த்து இன்பங்கள் ஏற்று வாழத்தான் போகிறோம்… நாம் சாவை வென்றுவிட்டோம்…
இருவரும் விழியாலே பேசினர். மௌனமே அங்கு மொழியாக, அவர்கள் அன்பு வரலாறு எழுதப்பட்டது.


நீ இல்லாத வாழ்வை என்
நித்திரையின் கனவிலும் நினைப்பதில்லை…
அதில் இனிமை இல்லை
இன்பம் இல்லை…. இல்லையொரு மலர்ச்சி…
உன் அழகு முகம் பார்த்து
ஆண்மை மொழி கேட்டு
பழகும் பொழுதுகள் எனக்கு வேண்டும்
உன் மடிமீது உறங்கி விழிக்கும் அந்த
விடியல்கள் வேண்டும்.
உன் மார்பில் முகம் புதைத்து
சோர்வு நீக்க நான்
அயர்ந்துறங்க வேண்டும் அன்பே….
இந்த மௌனத்தின் அணைப்பில்
நாம் கட்டுண்டு காதலைச் சொன்ன
நினைவெல்லாம் உனக்கு வருகிறதா….?
அவை சென்ற பிறப்பின் ஞாபகங்கள்.
நாம் பிறவிதோரும் பிறந்து
இறப்பின் எல்லை கடந்து
உறவு கொண்டு வாழ
உரிமை கொண்ட காதலர்கள்…


(தொடரும்)….. 
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி  radharajesh18@gmail.com.

No comments:

Post a Comment