அன்பெனும் பூங்காற்று - 1
அன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள், குளிர் வாடை வீசிக் கொண்டிருந்த வேளை. உள்ளத்தில் காதல் பெருக்கெடுத்த காதலர்களை எல்லாம் அந்த வாடைக் காற்று வாட்டிக் கொண்டிருந்த தருணம். இளவெயிற் சூட்டில் எருமைகள் எல்லாம் குளிர்காய்ந்து கொண்டிருந்தன. அந்த முற்பகல் பொழுதில், நெறும்பூர், மேட்டுத்தெருவில், இருந்த மேட்டுக்குடி மாளிகை ஒன்றின் முன்பு ஒரு அழகிய வெளிநாட்டு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து எழுந்த ஒலிப்பானின் இரைச்சலில், தூங்கிக் கொண்டிருந்த வீட்டுக் காவற்காரன் எழுந்து விரைவாய் பெரிய கதவுகளைத் திறந்தான். விறைப்பாய் நின்று வணக்கம் செய்தான். அந்த மாளிகையின் வாசலில் ஒரு வயதான, கைம்பெண்ணான ஒரு அம்மாள் வந்து நின்று யாரையோ எதிர்ப்பார்த்திருந்தாள். வண்டியைப் பார்த்ததும் அவள் முகம் ஒளிமிகுந்தது. வண்டி வந்து நின்றதும் அதிலிருந்து ஒரு இளைஞன் வெளியேறினான். அந்த அம்மாளைப் பார்த்து தன் முகம் முழுதும் பற்கள் தெரிய சிரித்தான்.
“அம்மா... அம்மா... மை ஸ்வீட் அம்மா...” அவன் அந்த அம்மாளை அணைத்துக் கொண்டான்.
அந்த அம்மாளின் கண்கள் கலங்கினாலும் அதை கடந்து அவள் முகத்தில் ஒரு கம்பீரம் தெறித்தது.
“மோகன்... மை பேபி...” அந்த அம்மாள் தன் மகனை உச்சிமுகர்ந்தாள்.
“ஸோ... ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா...?” மோகன் கேட்டான். அவன் குரலில் ஒரு அக்கறை இருந்தது.
“இல்லப்பா... இப்ப தான் ஒரு ஃபைவ் மினிட்ஸா... எனக்கு ஒரு மீட்டிங் போகணும்... அதுக்குள்ள உன்ன வரவேற்க நின்னிட்டுருந்தேன்...” அந்த அம்மாள் சொன்னார்.
“ஐ நோ... என் அம்மா இவ்ளோ நேரம் இருந்ததே பெரிய விஷயம்...” மோகன் குறும்பாய்ச் சொன்னான்.
“சில்லி பாய்... சரி மோகன்... நான் இப்ப மீட்டிங் கிளம்புறேன்... ஈவ்னிங் மீட் பண்ணலாம்...” அவர் சொல்லிவிட்டு வேறு ஒரு உயர்வகை வண்டியில் கிளம்பிச்சென்றார்.
மோகன் என்று அழைக்கப்பட்ட மோகன்ராஜ், இளைஞனைப் போல் தோன்றினாலும், 28 வயது நிறைந்தவன். அவன் முகத்தில் தெரிந்த இளமை அவன் கண்களில் இல்லை. அதில் ஆழ்ந்த கவலையும், மிகுந்த முதிர்ச்சியும் தெரிந்தது. மோகன்ராஜ், பிறவியிலேயே மிகவும் பணக்காரனான தந்தைக்குப் பிறந்தவன். அவன் தந்தை இன்று இல்லை. ஆயினும் அவன் தாய் தான் எல்லா தொழிலையும் கவனித்துக் கொள்கிறான். மோகன்ராஜ், வணிகமேலாண்மை படிக்க அமெரிக்க நாட்டிற்குச் சென்றவன் அங்கேயே ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக சேர்ந்துவிட்டான். அவன் மீண்டும் தாய் நாட்டிற்குத் திரும்பாததற்குக் காரணம், மேகலா... அவன் மனைவி... உண்மையைச் சொன்னால், முன்னாள் மனைவி. மோகனும் மேகலாவும் பள்ளி முதலே தோழர்கள். படிக்கச் சென்றதும் ஒரே பல்கலையில்தான். அங்கு சென்றபின் அவர்கள் காதல் விவரம் வீட்டிற்குத் தெரியவந்தது. ஆனால், அவர்களைப் பெற்றவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே, மோகனும் மேகலாவும் அமெரிக்காவிலேயே திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர். மேகலா, ஒரு நவீன நாகரிக மங்கை. அவளும் மோகனும் உருகி உருகி காதலித்திருந்தாலும், அவர்கள் காதல் வாழ்க்கை விரைவில் கசந்து போனது. மோகனால் எதையும் கட்டுப்படுத்த இயலவில்லை. அதனால், அவர்கள் பிரிந்துவிட முடிவு செய்தனர். மோகனின் மகன் அருண், மேகலாவுடன் இருப்பது என்ற உடன்பாட்டை மோகன் முதலில் ஏற்கவில்லை என்றாலும், தன் மகனின் எதிர்காலம் கருதி ஏற்றுக் கொண்டான். ஆனால், அவ்வப்போது அவனைப் பார்க்கும் உரிமையை அவன் பெற்றான்.
சிலநாள் அமெரிக்காவில் அவன் வாழ்ந்திருந்தான். பின் அவன் தந்தை மறைந்த போது இந்தியா திரும்பினான். அவன் தாய் மேற்கொண்டு தொழிலைக் கவனித்துக் கொள்வதாக அறிந்தான். எனவே அவன் அமைதியாக அமெரிக்கா திரும்பினான். இருந்தாலும், தன் தாயைக் காணவேண்டும் என்ற ஆர்வத்திலும், வெகுநாட்களாக, பல ஆண்டுகளாக அவன் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடை காணவும், அந்த மர்மத்தை அறிந்து கொள்ளவும் அவன் இந்தியாவிற்கு வரவேண்டியிருந்தது. அதற்காகத் தான் அவன் இப்போது இங்கு வந்துள்ளான்.
மோகன், மாடிப் படிகளை ஏறி தன் அறையை அடைந்தான். வெகுநாட்களாகப் புழங்கப்படாமல் இருந்தாலும், அவன் தாய் அவ்வறையை நன்றாய் பராமரித்து வந்திருந்தாள். மோகன், அவன் படுக்கையில் அமர்ந்தான். சிறிது நேரம் பலகணியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டுத் தோட்டம் புலப்பட்டது. மெதுவாய் எழுந்து தன் உடைகளை அவிழ்த்து குளிக்க ஆயத்தமானான். தன் உடைமாற்றும் கண்ணாடி முன்பு பிறந்த மேனியாய் நின்றான். அவன் கண்கள் அவன் உடலழகை வியந்து ரசித்தது. அவன் பல முறை கண்ட காட்சிதான் என்றாலும் அதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அலுத்துப் போவதில்லை. அவன் தன் முகத்தைப் பார்த்தான். கண்ணாடியின் மூலையில் இருந்த ஒரு ஒட்டப்பட்ட சீட்டைப் பார்த்தான். மிகவும் சிறியதாக இருந்த அந்த சீட்டைப் பார்த்ததும் அவன் முகம் சிறுத்தது. அவன் தொண்டை எச்சில் விழுங்கியது. அந்த சீட்டில் “A.M" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மோகனுக்கு பழைய நினைவுகள் தோன்றின. அந்த அறையில் அவன் வாழ்ந்திருந்த காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளை அவன் நினைவு கூர்ந்தான்.
மோகன், சில நொடிகள் நினைவுகளில் மூழ்கிப்போனாலும், பின்னர் குளிப்பதற்காக தன் குளியலறைக்குச் சென்றான். நீர்கொதிகலனின் வெப்பத்தை சீராக்கிவிட்டு, குளியலை துவங்கினான். குளியலறைச் சுவரில் மீண்டும் ஒட்டப்பட்டிருந்த அதே சீட்டு அவனை மேலும் துன்புறுத்தியது. அவன் முகம் சுளுக்கினான். விரைந்து குளித்துவிட்டு அறைக்குள் வந்தான். உடலை உலர்த்திவிட்டு மாற்றுடை அணிந்தான். பின்னர், தன் துணியறையின் கதவைத் திறந்து அதன் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்பட குறிப்பை எடுத்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் அவனுடைய சிறுவயது முதல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கியிருந்தன. ஆனால், அந்தப் புகைப்படங்களில் எல்லாம் அவன் மட்டும் இல்லை. அவனுடன் மற்றொருவன் அதில் இருந்தான். அவன் மோகனை விட மூன்று நான்கு வயது இளையவனாகத் தெரிந்தான். மோகன் ஒவ்வொரு புகைப்படத்திலும் அவனுடைய உருவத்தை வருடிப்பார்த்தான். அவன் அவ்வப்போது பெருமூச்செறிந்தான். இறுதிப் பக்கத்தைப் புரட்டினான். அதில் எழுதியிருந்த சொற்றொடரைப் படித்தான். அவன் கண்களில் கண்ணீர்த் திரையிட்டு அவனைப் படிக்க விடாமல் செய்தது. தன் கண்களை சிமிட்டி கண்ணீரை விழச்செய்தான். இப்போது அந்த எழுத்துக்கள், அந்த அழகிய கையெழுத்தில் நன்றாய்ப் புலப்பட்டன.
“என் மோகனுக்கு அன்புடன் அருண்....”
(தொடரும்...)
கருத்துக்களைத் தெரிவிக்க: radharajesh18@gmail.com
No comments:
Post a Comment