Tuesday, June 21, 2011

காதலாகி கசிந்துருகி - பகுதி 7 & 8


குறிப்பு: இக்கதையின் பாத்திரப் படைப்புகள் யாவும் கற்பனையே. நிகழ்வுகள் சில என் சொந்த அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடப்படும் நபர்கள் யாவரும் கற்பனை. கதையில் சூடான உடலுறவுக் காட்சிகள் இருக்காது. இரு இளைஞர்களுக்கிடையேயான மெல்லிய காதலைப் பற்றி சொல்லும் கதை.

-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 7

----------------------------------------------------------------------------------------------------------

அர்ஜூனுக்கு உடல் குளிக்கவேண்டும் போல இருந்தாலும், அவனது பலகீனமான நிலையும், காய்ச்சலடித்த உடல்நிலையும் அவனை அசையாது செய்திருந்தது. அவனுக்குத் தெரியும், இப்போது ஒரே வழி வெந்நீரில் நனைத்த துண்டால் உடல் முழுதும் துடைத்து விடவேண்டும். ஆம்.. அதை ராஜேஷ் தான் இப்போதைக்குச் செய்ய முடியும். இந்த நினைவே அவன் காதல் நோயை மிகுதியாக்கி அவனை வாட்டியது. ராஜேஷின் கைகள் தன் உடல் மீது படுவதை நினைத்த போதே அவன் உடல் முழுதும் சிலிர்த்தது. அவன் ஒரு நொடி கண்களை மூடி தன் மனதைக் கட்டுப்படுத்தினான். கண்ணைத் திறந்து பார்த்த போது, ராஜேஷ் தயங்கியபடியே உள்ளே வந்தான்.

“ம்…ம்.. அர்ஜூன்… டாக்டர் உன் உடம்ப ஈர துண்டால துடச்சு விடச் சொல்றாரு… நான் துடச்சுவிடவா…?” ராஜேஷ் மிக மிக தயங்கியபடியே கேட்டான்.

ப்ளீஸ்… அர்ஜூன்… சரின்னு சொல்லு… நான் உனக்கு செய்யும் இந்த பணிவிடையில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். உன் அழகான அந்த உடம்பில் என் கைகளால் தொடவேண்டும்….
ராஜேஷ் தயங்கியபடியே சொன்னதைப் பார்த்ததும் அர்ஜூனுக்கு சுருக்கென்றது. 
இவனுக்கு என் உடம்பை தொட பிடிக்கவில்லை… அதனால் தான் இத்தனை தயக்கம்… டாக்டர் சொன்னதால் செய்ய நினைக்கிறான். ராஜேஷ், நீ என் உடலைத் தீண்டும் அந்த ஒரு இன்பத்திற்காக நான் எத்துணை முறை வேண்டுமானாலும் காய்ச்சலோடு படுக்கத் தயார். ஆனால் உன் முகத்தில் தெரியும் இந்தத் தயக்கம்…. 
அர்ஜூன் பெருமூச்சு விட்டான்.
“உனக்குப் பிடிக்கலைனா செய்ய வேண்டாம் ராஜேஷ். என்னால உனக்கு நிறைய கஷ்டம்” அர்ஜூன் குரல் தழுதழுத்தது.
ராஜேஷ் கட்டிலில் அர்ஜூனின் அருகில் அமர்ந்தான். 
“அர்ஜூன், உனக்குப் பயித்தியமா…? நீ என் ஃப்ரெண்ட்… இத ஆயிரந் தடவ நான் சொல்லிட்டேன். உனக்குச் செய்ய எனக்குக் கசக்குமா என்ன…? ஒரு நிமிஷத்துல நான் வந்துடறேன்….” ராஜேஷ் அர்ஜூனின் தலையைக் கோதியவாறே சொன்னான்… எழுந்து அருகில் இருந்த குளியலறைக்குள் சென்றான்.
சற்று நேரத்திற்கெல்லாம் ராஜேஷ் ஒரு சிறிய வாளியில் சுடுநீரும் ஒரு துண்டும் கொண்டு வந்தான். பின்னர் மெதுவாக அர்ஜூனின் அருகில் அமர்ந்து, அவன் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்தான். அர்ஜூனோ அந்த சொர்க்கத்தின் வாசலில் கால்கள் தள்ளாட, கழிவின்பமெய்தி, இன்பத்தின் சிகரத்தின் மூச்சிறைக்க ஏறினாற் போல உடல் முழுதும் சிலிர்த்து கண்கள் மூடிக் கொள்ளவும் தோன்றி, மூடாமல் திறந்து கொண்டு ராஜேஷின் அழகை அள்ளிப் பருகவும் தோன்றி, இன்ப வேதனையில் திளைத்தான்.
ஒவ்வொரு பொத்தானும் அவிழ்க்கப்பட சட்டை விடை பெற்றது. ராஜேஷ் உதறும் கைகளுடன் அர்ஜூனின் அரைக்கால் சட்டையை (ஷார்ட்ஸ்) அவிழ்த்தான். பின்னர் இருப்பது ஒன்றே ஒன்று.. அது உள்ளாடை… ராஜேஷ் அதையும் அவிழ்க்க நினைத்தான். அவன் கைகளோ அவனை ஏமாற்றியது. அதில் திடீரென வலுவில்லாதது போன்ற ஒரு உணர்ச்சி. ராஜேஷ் வியர்வையின் குளத்தில் தெப்பமாய் மிதந்தான். அவன் இதயமோ ஆயிரம் முறை லட்சம் முறை துடித்தது. அவன் மெதுவாக மிக மெதுவாக அர்ஜூனின் உள்ளாடையை அவிழ்த்தான்.
எல்லாம் விடை பெற்றது. அழகு என்னும் தெய்வம் இப்படித்தான் இருக்கும் போலும்…. அழகின் இலக்கணம் இது தான் போலும்… அழகு என்னும் சொல்லின் பொருள் இவன் தானோ என்னமோ…. அழகின் உச்சம் இந்த சிறிய இளைஞன் தான் நிச்சயம். ராஜேஷின் திறந்திருந்த வாய் மூட பல மணித்துளிகள் ஆனது.
சந்தனப் பலகையில் செய்த தெய்வீகச் சிற்பம் போல அர்ஜூன் சுடர் விட்டுப் பிரகாசித்தான். அவன் ஒவ்வொரு அங்குல உடலும் தங்கச் சுரங்கம் போல ஆயிரம் கோடி சூரியப்பிரகாசமாய் விளங்கியது. ராஜேஷின் கண்கள் அந்த அழகிய உடலை அப்படியே படம் பிடித்தது. அவன் வெந்நீரில் நனைத்த துண்டினால் அர்ஜூனின் உடலைத் துடைத்தான். அவன் முடியில்லா அழகிய மார்பிலும், வயிறிலும், வாழையின் தண்டைப்போன்ற வழுவழுப்பான தொடைகளிலும், கணுக்கால், முழங்கால் எல்லாவற்றிலும், அவன் ஆண்மையின் திறம் காட்டும் மர்மஸ்தானங்களிலும், ராஜேஷின் விரல்கள் பட அந்த வெந்நீர் குளியல் நிறைவேறியது. 
அர்ஜூனைப் பற்றி நான் சொல்லவில்லை அல்லவா… அவன் அந்த சொர்க்கதின் உள்ளே சென்று அங்கும் இறந்து சொர்க்கத்தின் சொர்க்கத்திற்கே சென்று விட்டான். அவன் உள்ளம் கவர்ந்த காதலனின் கைகள் பட்ட அவன் உடல் தேவஸ்வரூபம் அடைந்து விட்டது. அந்த ஆண்மை நிறைந்த கைகளில் தன் மென்மையான உடலைத் தந்து விட்டு அவன் உயிர் மட்டும் வெளியில் இருந்து அந்த அற்புதக்காட்சியைக் கண்டது. இது ஒரு உலக அதிசயம். அவர்களுக்குள் ஊறும் காதல் இப்போது வெள்ளமென பெருகியோடி அருவியாகி ஆறாகி கடலில் சங்கமிப்பது போல அவன் உணர்ந்தான்.
ராஜேஷ்… எனை எடுத்துக் கொள்… என் ஆறு புலன்களையும் உனக்குள் நான் அடக்கிவிட்டேன்.. என் கண்கள் திறந்தாலும் மூடினாலும் காட்சியாக நீதான் இருக்கிறாய்… என் நாசியில் நறுமணமாக உன் வாசனைதான்… என் இதழில் உன் மீது பட்ட காற்றின் துளிகளை நான் இழைத்துக் கொண்ட சுவை… என் காதுகளில் உன் மூச்சின் சத்தம்… என் உணர்வுகளில் உன் விரல் தீண்டும் இந்த இன்பம்… என் ஐம்புலனையும் ஆக்கிரமித்துக் கொண்டாயே…. ராஜேஷ்… அப்படியே என்னை எடுத்துக் கொள்… நான் உனக்காக படைக்கப்பட்டவன்….
அர்ஜூன் கண்களைத் திறந்து இந்தப் பூவலகில் மறுபடியும் பிரவேசித்த போது அவன் புது உடைகளை அணிந்திருந்தான். ராஜேஷை அங்குக் காணவில்லை… 
எப்படி இருப்பான். அவன் அடுத்துள்ள அறையில் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். தன் கைகளைப் பிசைந்து, தலை மயிர்களைப் பிய்த்து, பல்லைக் கடித்து, அர்ஜூனை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொங்கும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். பற்களால் உதடுகளைக் கடித்து தன் நாவையும் கடித்து அவை அர்ஜூன் உடலில் உரச வேண்டும் என நினைப்பதைக் கட்டுப்படுத்தினான். கைகளை இறுகக் கட்டிக்கொண்டு அவை அர்ஜூனைச் சிறைப்படுத்த நினைப்பதைக் கட்டுப்படுத்தினான். மார்பினில் மூச்சை நிறுத்தி அது அர்ஜூனை தன்னோடு அணைத்துக் கொள்ள நினைப்பதைக் கட்டுப்படுத்தினான். உடலின் ஒவ்வொரு அங்கமும் அவனை மீறி அர்ஜூன் மீது சென்றது. அர்ஜூன்… அர்ஜூன்… அர்ஜூன்… என அவன் எண்ணம் கூட அவனை ஏமாற்றிவிட்டு அர்ஜூன் பல்லவி பாடியது. இனியும் போதும் இந்தக் கட்டுப்பாடுகள். அவனால் இயலவில்லை… பொறுத்தது போதும்… அர்ஜூனிடத்தில் தன் காதலை இக்கணமே சொல்லிவிட வேண்டியதுதான் என நினைத்தான் ராஜேஷ்… உடனே அவன் உடல் பூரித்தது. மெல்ல எழுந்து அர்ஜூன் இருக்கும் அறை நோக்கி நடக்கலானான்… 

காதலைச் சொல்ல என் கழுத்துவரை
வார்த்தை வந்தும்
பேதையென் வாய்க்கு மட்டும்
பேரச்சம் உருவாக
ஆதலால் அமைதியாய் இருந்துவிட்டேன்.
சொல்லத்தான் இல்லையன்றி,
என் உயிர்க்கூட்டின் வாயிலில்
மெல்லத்தான் நீ நுழைந்து என்
உள்ளத்து அரண்மனையில் அமர்ந்துவிட்ட திறனை
கள்ளம் செய்தெந்தன் காதலைப் பெருக்கிவிட்ட பேரறிவை
சொல்லவும் முடியாமல் உன் காதலை
மெல்லவும் முடியாமல்
உள்ளம் தவிக்கிறேன்
என் அன்பே
என் உயிர் வரை வலிக்கிறேன்.
காதலெனும் கடைவழியில்
நடைபிணம் போல் வாழ
நானென்ன பாவம் செய்தேன்
உன்னைக் காதலித்ததை அன்றி…



(தொடரும்)…..  
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.




-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 8

----------------------------------------------------------------------------------------------------------

நாம் யாரையாவது காதலிக்கும் போது, அதுவும் அவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கும் நாம் அன்றாடம் பார்க்கும், பழகும் நபராக இருக்கும் போது, அவர்கள் நம்மைக் காதலிப்பார்களோ மாட்டார்களோ என அஞ்சும் போது, நமது காதல் தான் நம்முடைய துன்பமாக மாறிவிடும். அது நமது நெஞ்சை அழுத்திக் கொண்டு, நீடித்த வலியாக மாறி அதை வெளியிடும் வரை நிம்மதி இழக்கச் செய்துவிடும். அதுபோன்றதொரு நிலையை ராஜேஷ் அடைந்திருந்தான். இனியும் மறைக்க இயலாது என்ற ஒரு நிலை வந்து அவனுக்கு வேகத்தைக் கொடுத்ததால் தான் அவன் உடனே புறப்பட்டான். 
ஆனால், ஒவ்வொரு அடி அவன் அர்ஜூன் அறையை நோக்கி எடுத்து வைக்கும் போதும், அவன் வேகம் படிப்படியாகக் குறைந்தது. இறுதியில் அவன் அர்ஜூன் முன் சென்று நிற்கும் போது அவனுக்கு பயம் மட்டுமே எஞ்சியது. ஒருவேளை இவன் நம்மைப் புறக்கணித்தால், இவனருகில் இருந்து கொண்டு இவனோடு வாழும், இவனை அன்றாடம் காணும் இந்த இன்பம் கூட கிடைக்காமல் போய்விட்டால்…. ராஜேஷின் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

அர்ஜூன் ராஜேஷைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை புரிந்தான். அவ்வளவுதான், கொஞ்சம் நஞ்சம் இருந்த அந்த வேகமும் குறைந்து விட்டது. ராஜேஷ் இந்தப் புன்னகையை இழக்க விரும்பவில்லை. அர்ஜூன் தன்னைக் காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவனருகில் இல்லாமல் இருப்பதுதான் பெரிய கொடுமை… அதனால் அமைதி காக்க முடிவு செய்தான்.
அன்றொருநாள் அவர்கள் இருவரும் மனக் குழப்பங்களோடு போராடி இரவின் மடியில் தூக்கத்தைத் தேடி அருகருகே படுத்து அமைதியின்றி உறங்கினர். மறுநாள் அர்ஜூன் முழுவதும் நலமாயிருந்தான். உடலில் சற்று தெம்பு வந்திருந்தது. ஆனாலும் அலுவலகம் செல்லும் அளவிற்கு தெம்பு வரவில்லை. ராஜேஷை மட்டும் வற்புறுத்தி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டான் அர்ஜூன்.
ராஜேஷும் அர்ஜூனின் வற்புறுத்தலுக்காக அலுவலகம் சென்றான். அவன் உள்ளம் இங்கே ராஜேஷின் படுக்கையறையில் அவன் அருகில் தான் இருந்தது. அவன் உடல் மட்டும் அலுவலகம் சென்றது. அவன் பணி எதுவும் அன்று ஒழுங்காய் நடக்கவில்லை. காலையில் இருசக்கர வாகனத்தை பல இடங்களில் பலர் மீது மோதுவது போலச் சென்றான். பணியிலும் பல தவறுகள். ராஜேஷின் மனமோ அர்ஜூன் மீதே இருந்தது. அவன் அன்று மாலை கிளம்பி நேரே தன் வீட்டிற்குச் சென்று தன்னறையில் நுழைந்து கதவுகளைச் சாத்தி தாளிட்டான்.
அவனுக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டி இருந்தது. ஆம்… அவன் அர்ஜூனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவனை வாட்டும் அந்த ஏக்கத்தை அவன் போக்க வேண்டும். ஓரளவு குறைக்கவாவது வேண்டும். அவன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். இனியும் அர்ஜூனுடன் இருக்கும் நேரங்களில் அமைதியாய் இருக்க முடிவு செய்தான். அவனுடன் ஆழ்ந்த நட்பு கொள்ள முடிவு செய்தான். அவனைத் தன் காதலானாகப் பார்க்கும் எண்ணத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அர்ஜூன் இதற்கு ஒத்துக் கொள்வானா எனத் தெரியாமலேயே அவன் மீது மேலும் மேலும் காதல் வளர்ப்பது பேராபத்தை விளைவிக்கும் என ராஜேஷ் பயந்தான்.
அவன் சற்று தெளிவான மனநிலையுடன் அர்ஜூன் வீட்டை நோக்கி நடந்தான். அர்ஜூனைக் கண்டதும் அவன் மீண்டும் பழைய நிலையை அடைந்தான். அவனால் அவ்வளவு எளிதாக இதை செய்ய இயலாது என புரிந்தது. இருந்தாலும் செய்ய வேண்டும்.
அடுத்து வந்த நாட்கள் அவர்கள் இருவருக்குமே இன்பமான நாட்கள். அவர்கள் பெரும்பாலும் ஒன்றாகவே பொழுதைக் கழித்தார்கள். ராஜேஷ் அர்ஜூனை அழைத்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றினான். தன் நண்பர்கள் அனைவருக்கும் அர்ஜூனையும் அறிமுகம் செய்து வைத்தான். எல்லாருமே அர்ஜூனும் ராஜேஷும் இணைபிரியா நண்பர்கள் என நம்பினர். அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பு போல் எந்த நண்பர்களும் இருந்ததில்லை என பேசிக்கொண்டனர்.
ராஜேஷின் மன வலிகள் எல்லாம் அவன் டைரிக் குறிப்புப் பக்கங்களை நிறைத்தன. அர்ஜூனோ அவன் தலையணையை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் எதுவரை இப்படியே தொடர்வது என தெரியாமல் தொடர்ந்தனர்.
நாட்கள் மிக வேகமாக ஓடி மாதங்கள் கடந்தன. காதல் விதையினின்று வரும் வேர்ச்செடியாகி, தழைத்தோங்கி வளர்ந்து கிளை பரப்பி, நிழல் விரிந்த நெடுமரமாய் வளர்ந்து நின்றது. மழைக்காலத்தின் துவக்கம் அது.
மழைக்காலம். காதலர்களுக்கு கனவுகள் பூக்கும் காலம். காதல் நோயால் பிணிக்கப்பட்டவர்களுக்கு கனவுகள் துன்புறுத்தும் காலம். பிரிவெனும் பெருநோய் வந்து வாட்டும் காலம். அர்ஜூனும் ராஜேஷும் தன் வெறும் படுக்கைகளை நேசிக்க மறந்து தனிமையில் தவித்து காதல் நோய் முற்றிப் போய் அவதிப்பட்டனர். இருவரும் ஒருவரையொருவர் காணத்தவித்தும் காதல் கொள்ளத்தவித்தும்…. அடடா…. இரக்கம் காட்டுங்கள் இவர்கள் மேல்.

அன்று சாரல் மழை பொழிந்திருந்த நேரம், ராஜேஷ் அர்ஜூனை அழைத்துக் கொண்டு கொஞ்சம் மழையில் நனைய விரும்பினான். தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அர்ஜூன் வீட்டிற்குச் சென்றான்.
“அர்ஜூன், வாடா கொஞ்சம் மழயில நனஞ்சிட்டு வருவோம்… என் வண்டிலயே போலாம்” ராஜேஷ் கேட்க, அர்ஜூன் சம்மதித்தான். விதியின் விளையாட்டை யார்தான் மாற்ற முடியும். இரவு 7 ஆனது, அவர்கள் இருவரும் சென்னையின் பிரதான சாலைகளைச் சுற்றிவிட்டு கூடுவாஞ்சேரி நோக்கி வந்த போது இரவு 11 மணி.

அர்ஜூன் ராஜேஷ் பின்புறம் நெருங்கி அமர்ந்திருந்தான். மழைச் சாரல் மெலிதாகப் போட்டது. ராஜேஷின் உடலைக் கட்டிக் கொண்டால் ஒருவேளை இதமாக வெதுவெதுப்பாக இருக்கக்கூடும். ஆனால் அவன் என்ன நினைப்பானோ…
ராஜேஷுக்கோ அர்ஜூன் தன்னை அணைத்துக் கொள்ள மாட்டானா என்ற ஆசை… அவன் ஒரு நிமிடம் தன்னை அர்ஜூன் அணைத்துக் கொள்வது போல கற்பனை செய்து பார்த்தான். என்ன சுகம்…. அவன் தன்னை மறந்து ஒரு நொடி கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தான். கண்களைத் திறந்து பார்த்தபோது ஒரு மாபெரும் ஒளி வெள்ளம்.
ஏதோ ஒரு பெரிய வாகனத்தின் ஒளிதான் அது. ராஜேஷ் என்ன நடக்கிறது என கவனிப்பதற்குள் ஒரு பெரிய லாரி அவன் வாகனத்தின் முன் பக்கத்தில் மோதியது… வெளிச்சம் எங்கும் வெளிச்சம்… சத்தம் எங்கும் சத்தம்… திடீரென இருட்டு எங்கும் பேரிருள். அமைதி எங்கும் பேரமைதி. மழை மட்டும் சொட்டு சொட்டாய் அங்கே இரு கிடந்த இரு உடல்கள் மீது தூறிக்கொண்டே இருந்தது. அந்த இரு உடல்களில் ஒன்றில் கட்டாயம் உயிர் இருந்தது. மற்றொன்றில்…..

என் அன்பே…!
நீ ஏன் என்னை விட்டு விலகிச் செல்கிறாய்
இந்த உலகம் இயங்கும் வரை நான்
உன்னுடனே இருப்பேன் என நினைத்தேனே
நான் முட்டாள்…
இந்த உயிர்கள் உள்ள வரை நிலைக்குமாறு
நாம் காதல் செய்வோம் என நினைத்தேனே
நான் முட்டாள்….
நீ எங்கு செல்கிறாய் என்னை விட்டு,
நான் வர இயலாத அந்த வான வெளிக்கா….?
நான் உன்னைக் கண்டறிய முடியாத ஓரிடத்திற்கா?
என் கைகளில் வலு இருந்தால் நான் உன்னைத் தடுப்பேன்.
என் நெஞ்சினில் உரம் இருந்தால் நான் உன்னைத் தாங்குவேன்
என் இதயத்தில் ஆற்றல் இருந்தால்
உன் பிரிவைப் பொறுப்பேன்…
இல்லையெனில் நானும் உன்னைத் தொடர்ந்து
அந்த உன்னத நிலைக்கு வந்துவிடுவேன்
அங்கு நம்மைப் பிரிப்பாரில்லை….
காதலை முறிப்பாரில்லை
நம்மை மறிப்பாரில்லை
அதுவே நமது துன்பங்களின் எல்லை….


(தொடரும்)….. 

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.

காதலாகி கசிந்துருகி - பகுதி 5 & 6


குறிப்பு: இக்கதையின் பாத்திரப் படைப்புகள் யாவும் கற்பனையே. நிகழ்வுகள் சில என் சொந்த அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடப்படும் நபர்கள் யாவரும் கற்பனை. கதையில் சூடான உடலுறவுக் காட்சிகள் இருக்காது. இரு இளைஞர்களுக்கிடையேயான மெல்லிய காதலைப் பற்றி சொல்லும் கதை.

-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 5

----------------------------------------------------------------------------------------------------------

ராஜேஷ் வீட்டுக்குச் சென்றவுடன் யாருடனும் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று விட்டான். அவன் அறைக்குள் அவன் தனிமனிதன். தன் இன்பதுன்பங்கள், விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காதல், இனிமை, சோகம், பயம் என அனைத்தும் அவனை ஆட்கொள்ளும் ஒரு தனிஉலகம். இந்த ஒரு வாரத்தில் அவனை ஆட்கொண்ட மற்றொரு விஷயம் அர்ஜூனின் நினைவுகள். தன் அறையின் கட்டிலில் படுத்துக் கொண்டு அர்ஜூனைப் பற்றி சிந்தையைச் செலுத்துவதிலேயே தன் நேரம் முழுதையும் செலவிட்டான் ராஜேஷ். அவன் வழக்கமான நண்பர்கள் சந்திப்புகள் அனைத்தையும் தள்ளிவிட்டு தனிமையில் அர்ஜூனின் நினைவுகளோடு காலம் கழத்தான். இது போன்ற சமயங்கள் அவன் வாழ்க்கையின் இன்பமான காலங்கள்.

தன் மொபைல் போனை எடுத்து “ஹாய்… டியர்… என்ன பண்ற?.” என தட்டி தகவலை அர்ஜூனுக்கு அனுப்பினான்… உடனே “சாப்டாச்சா?” என்ற தகவலையும் அவனுக்கு அனுப்பினான். வெகுநேரம் விடைக்காகக் காத்திருந்தான். ”ஆமா… இப்பதான் சாப்பிட்டேன்… இன்னைக்கு முழுக்க என்னோட இருந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்…” அர்ஜூனின் பதில் கிடைத்தது.
“நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்… நமக்குள்ள தாங்க்ஸ்… சாரி என்கிற வார்த்தைகள் இல்லை…” ராஜேஷ் அனுப்பினான்.
அர்ஜூன் அந்த்த் தகவலைப் படித்த்தும் அதில் வரும் “நாம்” என்கிற வார்த்தையை மிகவும் ரசித்தான்.
“அது சரி… ராஜேஷ்… நீ என்ன பண்ற…?” அர்ஜூன் கேட்டான்…
“நான் உன்னைப் பத்தி நினைச்சுக்கிட்டிருந்தேன்….” ராஜேஷ் சொன்னான்.
அர்ஜூன் உடம்பில் ஒரு சிலிர்ப்பு…. தன் மேனியைத் தழுவும் சில்லென்ற காற்றில் ராஜேஷின் கைகள் தீண்டுவதாக எண்ணினான். தன் எண்ண அலைகளை அவனும் பெற்றதாக நம்பினான்.
“நானும் கூட உன்னைத்தான் நினைச்சுக்கிட்டிருந்தேன்…. மெஸேஜ் வந்த்தையே கவனிக்காத் அளவிற்கு….” அர்ஜூன் ரிப்ளை.
ராஜேஷின் இதயம் இப்போது இரட்டிப்பு வேகத்தில் துடித்தது… மேலும் பல விஷயங்களைக் கேட்ட வேண்டும்… சொல்ல வேண்டும்… என்று அவன் மனம் துடித்த்து. ஆயினும் இப்போதைக்கு அவனால் அதற்கு மேல் பேச இயலாது.
“சர் அர்ஜூன்… உனக்குத் தூக்கம் வரும்.. நாளைக்கு வேற ஆஃபீஸ் போகணும்… நீ தூங்கு….” ராஜேஷ் அனுப்பினான்.
அர்ஜூன், இரவு முழுக்க உன்னோடு பேசிக்கொண்டிருக வேண்டும். இந்த உலகில் நீயும் நானும் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். என் மார்பின் மீது உனைச் சாய்த்து நான் உன்னோடே பல கதைகள் பேசி இந்த இரவு எவ்வளவு இனிமையாய் மாறும்….
ராஜேஷ் பெருமூச்சுவிட்டான்.
“சரி ராஜேஷ், நீயும் தூங்கு… குட் நைட்” அர்ஜூன் அனுப்பினான்.
ராஜேஷ், உனக்குத்தெரியாது என் இரவுகள் உறக்கங்களை உதறி பல நாட்கள் ஆகிறது. நான் தனிமையில் இங்கு பயத்துடன் எவ்வாறு உறங்குவது. நீ எனக்குப் பாதுகாப்பாய் என்னருகில் இருப்பதாய் ஒருவார்த்தை சொல்… நான் உன் மார்பில் முகம் புதைத்து உன் வாசம் பிடித்து என் சுவாசம் எல்லாம் நீயாக மாறி உறங்க ஆசை…
அர்ஜூன் கண்கள் கண்ணீரின் குளமாய் மாறி அவன் தலையணையை நனைத்தன. அவன் மனம் ராஜேஷ் எனும் பேரை ஆயிரம் முறை அசை போட்டது. அவன் உதடுகள் அதையே முனுமுனுத்தது. அவனுக்கு உறக்கம் வரவில்லை… தன் நெற்றியில் ராஜேஷ் முத்தமிட்ட இடம் இப்போதும் அனலாய் கொத்தித்தது அவனுக்கு. அர்ஜூன் அறிந்திருக்கவில்லை…. கடுமையான தாபஜ்ஜூரம் அவனை பீடிக்கப்போவதை. மறுநாள் அதிகாலை அவன் பாட்டி 4 நாள் பயணமாக ஊருக்கு போகிறாள்…
அர்ஜூனுக்கு இரவின் பிடி இறுக இறுக, ஜூரத்தின் வேகம் அதிகரித்தது. அவன் உறக்கத்தை மீறிய மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டான். ராஜேஷுக்கோ இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. அவன் மனம் ஒரு நிலையில் இல்லாது தள்ளாடியது. எங்கோ தனக்கு வேண்டப்பட்ட ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக அவன் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் உறக்கம் கொள்ளாமல் எழுந்து அமர்ந்து கொண்டான். இரவு விடிந்து கொண்டிருந்த அதிகாலை வேலை அது.
அர்ஜூனுக்கு முழுமையாக நினைவு தப்பிவிட்டது. அவனுக்கு ஜூரம் 102 டிகிரிகளைத் தாண்டிவிட்டது. அவன் கேட்கவோ உதவவோ ஆளின்றி அந்த வீட்டில் தனியே இருந்தான். அவன் பாட்டி இதையெதையும் அறியாமல் தான் திட்டமிட்டபடி இரவே ஊருக்குச் சென்றுவிட்டாள். அவன் அநாதையாக ஆதரவின்றி அங்கு கிடந்தான்.
மறுநாள் காலை மணி 5 ஆனதும், ராஜேஷ் ஜாக்கிங் செய்ய கிளம்பினான். அர்ஜூன் வீட்டின் முன் வந்து சில நிமிடங்கள் காத்திருந்தான். அவன் வரவில்லை. ஒரு வேளை தூங்கிப் போயிருப்பான்… அப்புறம் போன் செய்யலாம் அல்லது மாலை வந்து பார்க்கலாம் என நினைத்து அவன் சென்று விட்டான். இருந்தாலும் அன்று காலை அர்ஜூனைக் காணாதது அவனுக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது.
முற்பகலிலும், பகல் உணவு இடைவேளையின் போதும் அவன் செய்த தொலைபேசி அழைப்புகள் பதிலளிக்கப்படவில்லை.
ஒருவேளை மிகவும் பிசியாக இருப்பான்
ராஜேஷ் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். எந்தவொரு அழைப்பு வந்தாலும், தகவல் வந்தாலும் அது அர்ஜூனாக இருக்குமோ என எண்ணி அவன் ஏமாந்தான். அவனது பரபரப்பை அவனுடன் வேலை செய்யும் நண்பர்கள் கேலி செய்தனர். ஆனாலும் யாருக்கும் ராஜேஷின் மனப்போராட்டம் புரியவில்லை. அர்ஜூனுக்கு ஏதோ ஆகிவிட்டதாக ராஜேஷ் உறுதியாக நம்பினான். தான் முந்தினம் இரவு சரியாக உறங்கமுடியாமல் தவித்தது இதனால் தான் என நம்பினான்.
மாலை 4 மணி ஆனதும் அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே கிளம்பி, நேராக அர்ஜூன் வீட்டுக்குச் சென்றான். அழைப்பு மணியை அழுத்தினான். பதிலில்லை. அருகிலே பார்த்தபோது அர்ஜூனின் இருசக்கர வண்டி அங்குதான் நின்று கொண்டிருந்த்து. அர்ஜூனின் ஷூ கூட அங்கு இருந்தது. அப்படியானால் அர்ஜூன் வீட்டிற்குள்தான் இருக்கிறான். இந்த நினைவே ராஜேஷுக்கு கலவரத்தை உண்டாக்கியது.    
அர்ஜூனுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பயம் அவனைப் பிடித்தாட்டியது. அவனுக்கு சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்த்து. அதாவது முன் தினம் அர்ஜூனும் அவனும் பேசிக்கொண்டிருந்தபோது தன் வீட்டின் முன்கதவுச் சாவி ஒன்று எப்போது ஒரு பூந்தொட்டிக்கு அடியில் இருக்கும் என்றும், அது தனக்கும் தன் பாட்டிக்கும் மட்டுமே தெரியும் என்றும் அர்ஜூன் சொல்லியிருந்தான்.
ராஜேஷ் நேரே அர்ஜூன் சொன்ன பூந்தொட்டியின் அடியில் சென்று பார்த்தான். நல்ல வேளையாக அங்கு ஒரு சாவி, அர்ஜூன் சொன்னாற் போல இருந்தது.
வீட்டின் முன் கதவை ராஜேஷ் திறந்தான். நாலு கால் பாய்ச்சலில் படிகளை ஏறினான். அவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அர்ஜூனின் படுக்கையறையை அடைந்தான். கதவின் பிடிகளில் கைவைத்துத் தள்ள கதவு திறந்து கொண்டது. அங்கு அவன் கண்ட காட்சி அவன் 21 ஆண்டு வாழ்க்கையில் அவன் என்றும் அறிந்திராத ஒரு அதிர்ச்சியில் அவனை உறையச் செய்தது….

என் அன்பே…!
என்னை இங்கே தவிக்க விட்டு
எங்கோ சென்று விட்டாய் நீ….
என் இன்பங்கள் எல்லாம் உன் சட்டைப்பையில்
அதையாவது தந்துவிட்டுப்போ அல்லது
என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்
நீ அந்த எரிமலையில் குழம்பில் எறிந்தாலும்
நான் உன்கையால் மடிவதாய் எண்ணி
மகிழ்ந்துவிட்டுப் போகிறேன்…!


(தொடரும்)….. 
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.

 




-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 6

----------------------------------------------------------------------------------------------------------

நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, நம் மீது அன்பு கொண்டவர்களுக்கு, நாம் அன்பு கொண்டிருப்பவர்களுக்கு ஏதேனும் துன்பம் வரும் போது நம் மனமும் பாடாய்ப் படும். அதிலும் அவர்கள் அங்கு பிணியில் பிடியில் படுத்திருக்கையில், நாம் நிம்மதியாக ஒரு வாய்ச் சாப்பாடு கூட சாப்பிட முடியாது. ராஜேஷும் கூட அப்படிப்பட்ட மனநிலையில் தான் இருந்தான். அர்ஜூனுக்கு ஒன்றும் பெரிதாக இல்லை என டாக்டர் எவ்வளவு தான் சொன்னாலும், அவனால் ஒரு பிடி உணவு கூட சாப்பிடமுடியவில்லை.

அர்ஜூன் ஜூரத்தில் நினைவிழந்து படுத்திருந்ததை ராஜேஷ் கண்டதும், அதிர்ச்சி அடைந்தான். உடனே தனக்குத் தெரிந்த டாக்டர் கவுதமை ஃபோனில் தொடர்பு கொண்டு வரச் செய்தான்.
“ஒன்னும் பெருசா இல்ல ராஜேஷ்… அதிகமான ஜூரத்தால சின்ன மயக்கம்.. கூட, இவரு காலைல இருந்து ஏதும் சாப்பிடாம இருக்காரு. அதனால பிரஷர் லோ வா இருக்கு” கவுதம் ஆறுதலாய்ச் சொன்னான்.
அவனை வழியனுப்பி விட்டு ராஜேஷ் அர்ஜூன் அருகிலேயே இருந்தான். தான் இன்று வீட்டுக்குப் போவதில்லை என முடிவு செய்தான். அர்ஜூனின் பாட்டி நான்கு நாட்கள் ஊருக்கு போகப்போவதைப் பற்றி ஏற்கனவே அர்ஜூன் இவனிடம் கூறியிருந்தான். அதனால் தானே அருகில் இருந்து அர்ஜூனுக்கு பணிவிடைகள் செய்ய வேண்டும் என முடிவு செய்தான்.
கவுதம் வந்து சென்ற இரண்டு மணிநேரம் கழித்து அர்ஜூன் நல்ல நினைவில் இருந்தான். ராஜேஷ் வந்து செய்த உதவிகளை அவன் வெகுவாக நன்றியுடன் நினைத்தான்.
“ராஜேஷ்… நீ வரலைணா நான் இன்னேரம் என்ன ஆகியிருப்பேனோ தெரியாது…” அர்ஜூன் கண்ணீருடன் சொன்னான்.
ராஜேஷ் தன் கைகளால் அர்ஜூனின் கண்ணீரைத் துடைத்தான். ஒரு சிறு புன்னகை மட்டுமே புரிந்தான். பின்னர் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்து, சுவரின் ஓராமாக நின்று கொண்டு பொலபொலவென கண்ணீர் விட்டான்.
அர்ஜூன்…. நீ இல்லைனா எனக்கு வாழ்க்கையே சூனியமாயிடும். உனக்கு ஒன்னும் ஆக நான் விடமாட்டேன்… இப்ப கூட உனக்குத் தெரியாது நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு… நீ உடம்பு சரியில்லாம படுத்திருக்கிறத பாக்க பாக்க எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குது அர்ஜூன்…
ராஜேஷ் வெளியே சென்றதும், அர்ஜூனின் கண்கள் மேலும் அதிகமாக கண்ணீரை சொரிந்தன.
ராஜேஷ்… நான் எப்படிச் சொல்வேன்… நீ இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு…. இன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லாம நான் மயக்கத்துல இருக்கும் போது, நீ வந்து என்ன காப்பாத்த மாட்டியானு எனக்கு மனசு அடிச்சுகிட்டது.. என் கண்ண திறந்து உன்ன பாத்த அந்த நொடியே என் நோயெல்லாம் பறந்திடுச்சி…. ஐ லவ் யூ சோ மச் ராஜேஷ்…
இருவரும் ஒருவருக்கொருவர் கேட்கா வண்ணம் தங்கள் மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டனர். இரவு துவங்கியது. ராஜேஷ், அர்ஜூனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை கொடுத்தான்…
“ராஜேஷ்… இன்னைக்கு ராத்திரி இங்க என் பக்கத்துல படுத்துக்க… நீ இங்கயே இருந்தின்னா எனக்கு தைரியமா இருக்கும்… ஆனா நான் உன்ன கட்டாயப் படுத்தல….” அர்ஜூன் கெஞ்சலாகக் கேட்டான். ராஜேஷ் வேண்டாமெனச் சொல்லிவிடுவானோ என அவன் மனம் பயந்தது… வலித்தது…
“அர்ஜூன்…. நீ என்ன போன்னு சொன்னாலும் நான் போக மாட்டேன். உனக்கு உடம்பு நல்லா குணமானா தான் எனக்கும் நிம்மதியா இருக்கும். நான் நேத்தே சொன்னேன். நான் உன் ஃப்ரெண்ட். உனக்கு ஒன்னுன்னா நான் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்.” ராஜேஷ் சொன்னான்.
அர்ஜூனின் கண்கள் கண்ணீர் திரையிட்டன. மாத்திரைகளின் சக்தி அவன் இமைகளை இழுத்தது. அவன் உறங்கிப் போனான். ராஜேஷோ உறக்கத்தை தொலைத்தான். அவன் அர்ஜூனின் அருகிலேயே இருந்துகொண்டு அவன் உறங்கும் அழகை ரசித்தான். ஒரு சிறு குழந்தையைப் போல, ஒரு குட்டி தேவதையைப் போல, ஒரு அழகிய இளவரசனைப் போல அர்ஜூன் உறங்குவதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என ராஜேஷின் மனம் ஏங்கியது. அவனுக்கு உறக்கம் வரவில்லை. வெகுநேரம் அவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அர்ஜூன்… நீ எனக்கு கிடைப்பாயா…? நான் இதுவரை வாழ்நாளில் எதற்காகவும் இவ்வளவு ஏங்கியதில்லை…. நீ எனக்கு வேண்டும் அர்ஜூன்… நான் சாகும் வரை என்னருகில் நீ எனக்கு வேண்டும்… உன் அழகிய முகத்தைப் பார்த்துக் கொண்டே நான் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உணவும் உறக்கமும் இன்றிக் கிடப்பேன்…
இரவின் பிற்பகுதியில் ராஜேஷ் எப்போதோ உறங்கிப் போனான். விடியும் வேளையில், அர்ஜூன் உறக்கம் கலைந்து கண்கள் திறந்தான். தனக்கு உடம்பு சரியில்லாமல் படுத்திருந்தது நினைவுக்கு வந்தது. அவன் அருகில் ராஜேஷ் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்கும் அழகை அர்ஜூன் ரசித்தான். சீராக மூச்சுவிடும் ராஜேஷின் மார்பு அழகாக ஏறி இறங்கியதைக் கண்டதும் அந்த மார்பில் முகம் பதித்து தானும் உறங்க வேண்டும் என்ற எண்ணம் அர்ஜூனுக்கு எழுந்தது. தீராத ஆசையும் எழுந்தது.
ராஜேஷ் ஒரு கையால் ஒரு தலையணையை அணைத்தவாறு படுத்திருந்தான். அந்தத் தலையணையின் மீது அர்ஜூனுக்கு பொறாமையாக இருந்தது. அந்த்த் தலையணைக்குப் பதிலாக அவன் தன்னை அணைத்துக் கொண்டு உறங்கியிருக்கக்கூடாதா என்ற ஏக்கம் பிறந்தது. அர்ஜூன் பெருமூச்சு விட்டான். தன் உள்ளம் கவர்ந்த ஆண் மகன் தன் அருகிலேயே படுத்திருக்க அவனோ தன் கைகளை அசைக்கக்கூட தெம்பின்றி படுத்திருந்தான்.
ராஜேஷ் மெல்ல கண்விழித்தான். அர்ஜூனின் அழகிய மருண்ட விழிகள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது.
சேச்சே… அப்படியெல்லாம் இல்லை. எனக்கு எல்லாமே பிரமை… அவன் ஜூரத்தில் எங்கோ பார்த்தபடி இருக்கிறான்… அவன் ஏன் என்னைப் பார்க்கப் போகிறான்…?
ராஜேஷ் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். அர்ஜூனின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். ஜூரம் துளியும் இல்லை. ஆனால் அர்ஜூன் மிகவும் பலவீனமாக இருப்பதைக் கண்டான். அர்ஜூனால் எழுந்து அமரக் கூட இயலவில்லை. ராஜேஷ் அர்ஜூனின் இடுப்பைப் பிடித்து மென்மையாகத் தூக்கி அவனை அமரச் செய்தான். இருவருமே காதல் நோயால் தவித்தார்கள்…
தன்னை அப்படியே தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள மாட்டானா என அர்ஜூனின் மனமும், அவனை அப்படியே தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ராஜேஷின் மனமும் தவியாய்த் தவித்தது.
மனங்கள் பேசின. மௌனங்களும் பேசின. ஆனால் அவர்கள் தான் வாய் திறந்து பேசவில்லை. அடுத்ததாக ஒரு சிறு பிரச்சினை. அர்ஜூன் குளிப்பதா அல்லது வேண்டாமா என்று. அர்ஜூனுக்கு உடல் பிசுபிசுவென இருப்பதாகத் தோன்றியது. ஆனால் எழுந்து குளிக்கச் செல்லும் அளவிற்கு உடல் வலிமை இல்லை.
ராஜேஷ் டாக்டர் கவுதமை ஃபோனில் தொடர்பு கொண்டு அதுபற்றி கேட்டான்.
”ராஜேஷ்… முடியும்னா அர்ஜூனுக்கு சுடு நீரில் நனைத்த டவலால் உடல் முழுதும் துடைத்து விடுங்கள்… அவர் குளிப்பது அவ்வளவு உசிதமல்ல…” டாக்டர் எளிதாகச் சொல்லிவிட்டார்.
தான் அர்ஜூன் உடம்பைத் தொட்டு ஈர துண்டால் துடைத்து விடுவதா…?... நினைத்தாலே ராஜேஷின் உடல் சிலிர்த்தது. இதற்கு அர்ஜூன் ஒத்துக் கொள்வானா…..? ராஜேஷின் இதயம் படபடவென துடிக்கத் துவங்கியது.

நீ நீரில் நனைந்திருந்தாய்
என் நெஞ்சமோ காதலில் நனைந்திருந்தது
உன் உடலில் உருண்டோடும் அந்த
நீர்த் துளிகளை
என் உதடுகளால் உறிஞ்சிக் கொள்ள வேண்டும்
என் அன்பே…!
என் ஏழேழ் பிறப்பிற்கும்
என் தாகம் தீரும்
உன் மார்பில் உருண்டோடும் அந்த
வைர நீர்த்துளிகள்
உன் இதழில் உருளும் அந்த
தேன் மழைத்துளிகள்
எல்லாம் எனக்குத்தான் சொந்தம்
என் அன்பே…!
நீயும் எனக்குத்தான் சொந்தம்.

(தொடரும்)….. 
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.

காதலாகி கசிந்துருகி - பகுதி 3 & 4


குறிப்பு: இக்கதையின் பாத்திரப் படைப்புகள் யாவும் கற்பனையே. நிகழ்வுகள் சில என் சொந்த அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடப்படும் நபர்கள் யாவரும் கற்பனை. கதையில் சூடான உடலுறவுக் காட்சிகள் இருக்காது. இரு இளைஞர்களுக்கிடையேயான மெல்லிய காதலைப் பற்றி சொல்லும் கதை.

-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 3

----------------------------------------------------------------------------------------------------------

ராஜேஷின் மனநிலை, அல்ல அல்ல, மனம் அவனுக்கு ஒருநிலையில் இல்லை. அன்று காலை அவன் அந்த வீட்டின் முன் அந்த வண்டியைக் கண்டதும், சற்று நின்றான். அதே சமயத்தில் அந்த வீட்டின் கதவு திறந்து கொண்டு அர்ஜூன் வெளியே வந்தான். ராஜேஷ் இது வரை எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறான். தன் நண்பர்கள் பலரை நிர்வாணமாகக் கூடக் கண்டிருக்கிறான். ஆனால் யார் மீதும் அவன் மனம் இப்படிச் சென்றதில்லை. அர்ஜூனைக் கண்ட அந்த நொடிப்பொழுதிலேயே அவன் மனம் அர்ஜூன் பின்னால் சென்றுவிட்டது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ராஜேஷ் தற்போது சில நாட்களாக கனவில் ஒரு இளைஞனின் உருவத்தைக் கண்டு வருகிறான். சற்று குள்ளமாக, சிவந்த, அழகிய, அப்பாவியான ஒரு இளைஞனின் முகம், அதிலே கண்ணீர்… ராஜேஷ் அந்தக் கண்ணீரைத் துடைக்க நினைப்பான்… அதற்குள் கனவு கலைந்துவிடும். எங்கோ வாழ்க்கையின் பெரும் துயர்களை கண்டிருந்த ஒரு இளைஞனுக்கு தான் ஆறுதல் வழங்க வேண்டும் என நினைத்திருந்தான்.
இப்போது இதோ தன் கனவில் கண்டவன் நேரில் வந்து நின்றதும் எப்படி இருக்கும் அவனுக்கு…..? அவன் மனது இந்த முறை அவனை மீறித் துடித்தது. அவனால் அதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதற்கு வசதியாக தினமும் காலை இவனைப் பார்க்கும் வாய்ப்பும் இப்போது கிடைத்து விட்டது. இதைப் பயன்படுத்தி இவனை நண்பனாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவு செய்தான்.

வாழ்வின் சூட்சும விளையாட்டுகள் விதியின் வழி ஏற்படுபவை. இதோ இரு ஆன்மாக்கள் சந்தித்துக் கொண்டன. அவை இரண்டும் ஒன்றை ஒன்று தேடித்தான் இந்த உலகில் வாழ்கிறது. ஆனால் விதிவசத்தால் அவை இன்னும் ஒன்றையொன்று அடையாளம் காணவில்லை. ஆயினும் இந்த நிகழ்வுக்கான முன்னெற்பாடுகள் துவங்கி விட்டன. இந்த ஆன்மாக்கள் காதலில் சங்கமிக்கும் போது இந்த பிரபஞ்சமே பேரின்பம் கொள்ளும். காதலைத் தேடும் இந்த இரு இளைஞர்களும் தாங்கள் தேடுவது ஒருவரையொருவர் தான் என்று இன்னும் அறிந்து கொள்ளவில்லை. நாம் அந்த முயற்சியில் ஈடுபட இயலாது. இது விதி விளையாடும் நாடகம். இறுதியில் இவர்கள் கண்டுகொள்வார்கள் என்றே நாம் நம்பவேண்டியுள்ளது இப்போது.
அர்ஜூனும் ராஜேஷும் ஜாக்கிங்கில் நண்பர்களாகி ஒரு வாரம் கழிந்தது. தினமும் காலையில் இருவரும் ஒருவரையொருவர் திருட்டுத்தனமாகப் பார்த்து பெருமூச்சுவிடுவதிலேயே இருந்தனர். சனிக்கிழமை வந்தது. அன்று காலை, அர்ஜூன் எழுந்ததும் ஜாக்கிங் செல்ல ஆயத்தமானான். அவன் மனதில் ஒரு யோசனை உதித்தது. அதாவது மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, எனவே ராஜேஷை தனது வீட்டுக்கு அழைக்கவேண்டும் என்பதுதான் அது.
“குட்மார்னிங் அர்ஜூன்…” அர்ஜூன் தனது வீட்டுக் கதவை திறந்ததும் எதிரில் ராஜேஷ் நின்றிருந்தான். அர்ஜூன் ஒரு புன்னகையுடன் “குட்மார்னிங் ராஜேஷ்” என்றான்.
ராஜேஷ் தன் கருநிற விழிகளை அப்படியே பெரிதாக்கி அர்ஜூனின் அழகை அள்ளிப் பருகினான். அந்தக் காலை வேலையில், அழகிய வெண்ணிற டீஷர்ட்டும் கருநிற ரெக்ஸின் ஜாக்கிங் சூட்டும் அணிந்திருந்த அந்த அழகிய கந்தர்வனின் முகத்தைப் பார்த்ததும் ராஜேஷ் உடல் முழுதும் ரத்தம் சூடாவதை உணர்ந்தான். தன் இரு வலிமையான கைகளாலும் அந்தக் குட்டி தேவதையை தூக்கி எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. மிகவும் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை உதறினான். தான் எந்தக் காரணம் கொண்டும் ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பி என அர்ஜூனுக்குத் தெரியப்படுத்தக் கூடாது. அவ்வாறு தெரியப்படுத்தினால் அவன் நம் நட்பை உதறிவிடுவான் என ராஜேஷ் நம்பினான். அவன் அர்ஜூனின் நட்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் இழக்க விரும்பவில்லை.

அர்ஜூன் ராஜேஷின் அழகில் லயித்திருந்தான். ராஜேஷின் கட்டமைப்பான உடல் அவன் ஓடும் போது அழகாக அசைந்துகொடுத்தது. இந்தக் காட்சியால் அர்ஜூனின் உள்ளம் வேகமாக அசைந்துகொடுத்தது. தன்னை அவன் வலிமையான கைகளால் தூக்கி மார்போடு அணைத்துக் கொள்ள மாட்டானா…. என்ற ஆசை அர்ஜூனை வந்து ஆட்கொண்டது. ஆனால் அந்த ஆசையை அவன் உடனே அழித்துக் கொள்ள முயன்றான். ஏனெனில், ராஜேஷ் போன்ற ஒரு ஆண்மை ததும்பும் இளைஞன் ஓரினச்சேர்க்கை விரும்பியாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், தன்னைப் பற்றி தெரிந்தால் அவன் தன்னுடைய நட்ப்பை முறித்துக் கொள்வான். எனவே, இப்போது அர்ஜூனுக்கு முக்கியம் ராஜேஷின் நட்புதான். அதனால் அவன் அமைதி காக்க முடிவு செய்தான்.

இங்கனம் இருவரும் அமைதி காக்க முடிவு செய்ததை விதியெனும் விளையாட்டுப் பிள்ளை பார்த்துச் சிரித்தது. இவர்கள் வாழ்க்கையை ஒன்றாக்க மேலும் பல வாய்ப்புகளை உருவாக்க அது முடிவு செய்தது.
“ராஜேஷ், நான் ஒன்னு சொல்லட்டுமா?” அர்ஜூன் தயங்கியவாறே கேட்டான்.
“அர்ஜூன், அதாவது நாளைக்கு நான் உன் வீட்டுக்கு வரவேண்டும்… அதானே?” ராஜேஷ் கேட்டான்.
“கரெக்ட்… அதே தான்…”, அர்ஜூன் சொன்னான். தான் சொல்லவந்ததை அவன் உடனே புரிந்து கொண்டதை நினைத்து மகிழ்ந்தான்.
ராஜேஷின் மனம் நினைத்தது…. இதை நீ எப்போது சொல்வாய் என்றுதானே காத்திருந்தேன்… அர்ஜூன்… உன்னருகில் நான் இருக்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் என் வாழ்வின் இன்பமான தருணங்கள்….
”நாளைக்கு காலைல 9 மணிக்கு நான் உன் வீட்டு காலிங் பெல்லை அழுத்துவேன்” ராஜேஷ் சொன்னான்.
“தாங்க்ஸ் ராஜேஷ்… நீ நாளைக்கு என் வீட்லதான் சாப்பிடணும்….” அர்ஜூன் அன்புக்கட்டளை இட்டான். ராஜேஷும் ஏற்றுக் கொண்டான்.
இருவரும் அவரவர் வீடுகளைச் சேர்ந்தனர். ராஜேஷின் மனம் சனிக்கிழமையை வெறுத்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்தது. ஞாயிறு (சூரியன்) மாலை மறைந்து மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வருவதற்காக அவன் காத்திருந்தான். அர்ஜூன், சனிக்கிழமை முழுதும் அப்படியும் இப்படியுமாக அலைந்தான். அவன் அறையை முடிந்தவரை தூய்மைப் படுத்தினான். அழகு செய்தான். என்ன விஷயங்களை எல்லாம் பேசுவது என பலமுறை யோசித்துப் பார்த்தான். எந்த சூழ்நிலையிலும் காதல், உடலுறவு பற்றிய விஷயங்கள் எழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என முடிவு செய்தான். அந்த விஷயங்கள் வந்தால் தன்னைப் பற்றிய ரகசியம் வெளியாகக் கூடும் என்ற பயம் அவனுக்கு இருந்தது. சற்றேறக்குறைய இதே முடிவை ராஜேஷும் எடுத்திருந்தான். மறுநாள் அர்ஜூன் வீட்டில் எந்த விஷயங்களைப் பேசினாலும் காதல் மற்றும் உடலுறவு பற்றி பேசக்கூடாது என்று.
ராஜேஷுக்கு டைரிக் குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. அவன் அறையில் இருந்த பீரோவின் லாக்கருக்குள் அந்த டைரி இருக்கும். அந்த லாக்கரின் சாவி இவனிடத்தில் தான் இருக்கும். எப்படியும் அவன் அறைக்குள் யாரும் வரவும் மாட்டார்கள் இவன் பொருட்களை யாரும் தொடவும் மாட்டார்கள். ஆனால் சில சமயங்களின் தன் நண்பர்கள் யாரேனும் பார்க்க நேரிடலாம் என அவன் ஜாக்கிரதையாக அதை லாக்கரில் வைப்பான். ஏனெனில், அந்த டைரியில் அவன் இதுநாள் வரை கண்டிருந்த கனவுகளை எழுதியிருந்தான். தான் யாருக்காக காத்திருந்தான் என எழுதியிருந்தான். சனிக்கிழமை இரவு டைரி எழுத அவன் அமர்ந்தான்.
டைரிக்குறிப்பு… மே மாதம் 17 2008. சனிக்கிழமை.
இன்றுதான் என் வாழ்வில் நான் மிகவும் சிரமப்பட்டு என் பொழுதைக் கழித்தேன். இது என்ன ஒரு இக்கட்டான உணர்வு. நான் என்ன எதிர்ப்பார்க்கிறேன் என எனக்கே தெரியவில்லை. ஒரு வாரத்திற்கு முன்புதான் பார்த்த அந்த அழகிய இளைஞன் என்னை ஏன் இவ்வளவு பாடு படுத்துகிறான் என தெரியவில்லை. அவனுக்கு இது போன்ற விஷயங்கள் பிடிக்குமா எனத் தெரியவில்லை…. பிடிப்பது இருக்கட்டும்… தெரியுமா எனக் கூடத் தெரியவில்லை… அப்படியிருக்க எந்த நம்பிக்கையில் என் மனம் அவன் மீது செல்கிறது. அவனிடத்தில் என் காதலை நான் சொல்லக் கூட வாய்ப்பு அமையாமல் போகலாம். என் மனம் புண்படப் போகிறதா…? அவன் மறுத்தலித்தால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிமா…? தெரியவில்லை. அர்ஜூன், நீ என்னை விரும்புவாயா…? உனக்கும் என்னைப் போன்ற ஆசைகள், எண்ணங்கள் இருக்குமா…? நான் இந்த மனப்போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சியில் தவிக்கிறேன். எப்போதும் செய்திராத ஒன்றை இப்போது செய்கிறேன். ஆம்… அழுகிறேன்… என் கண்களில் நீர்த்துளிகள் உன்னை எண்ணி வருகிறது. உன்னை என் வாழ்வின் இறுதி மூச்சு உள்ளவரை என்னருகிலேயே வைத்துக் கொள்ள என் மனம் துடிக்கிறது.”
இந்தக் குறிப்பு எழுதி முடிக்கும் போது அந்த டைரியின் பக்கங்களில் ராஜேஷின் கண்ணீர்த்துளிகள் சிந்தியிருந்தன…. அவன் டைரியை மூடி வைத்துவிட்டு ஞாயிற்றுக் கிழமை காலை வேளைக்காகக் காத்திருந்தான்….

                                                அன்பே !
                                                அந்த நிலவைப் பார்க்கும் போது
                                                உனக்குப் பெண்முகம் ஏதேனும் தெரியும்ஆனால்
                                                எனக்கு உன்முகம் தானே தெரிகிறது.
                                                உன் அடர்ந்த புருவங்கள்
                                                அரும்பு மீசை
                                                இதழின் சிவப்பு
                                                பருவம் இழைந்த கன்னங்கள்
                                                எல்லாம் தெரிகிறது.

                                                என் வலிய தோள்களும்
                                                பரந்த மார்பும்உன்
                                                அழகிய முகம் புதைந்து நீ
                                                உறங்கிடத்தான் படைக்கப்பட்டன.
                                                நீ என்னைக் காதலிப்பதாய்ச் சொல்
                                                நான் உன்னை பிரபஞ்சத்தின்
                                                தடுப்புகளைத் தாண்டி
                                                இன்பப் பெருவெளியில்
                                                இழுத்துச் செல்வேன்.
                                                நாம் இருவர் மட்டும் இருப்போம் அங்கே
                                                காதல் வீதியெங்கும் நம்
                                                கனவுகளின் கடைத்தெருதான்.
                                                நீ மட்டும் ஒருவார்த்தை சொல்
                                                என்னைக் காதலிப்பதாய்……

(தொடரும்)…..  
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.



-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 4

----------------------------------------------------------------------------------------------------------

ஞாயிற்றுக்கிழமை காலை ஞாயிறு வந்ததும் ராஜேஷ் தன் மயக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல், எழுந்து நின்றான். இன்று ஜாக்கிங் இல்லை… அதற்கு பதிலாக ஒரு நாள் முழுவதும் அர்ஜூனுடன் கழிக்கப் போகிறோம் என்ற இன்பம் அவனை ஆட்கொண்டது. அவன் காலைக் கடமைகளை எல்லாம் வேகவேகமாகச் செய்தான். சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டான். இன்னும் வேகமாக ஓடாத அந்த கடிகாரத்தை நொந்து கொண்டான்.

அர்ஜூனின் காலைப் பொழுது அதைவிட மெதுவாக நகர்வது போல இருந்தது. தன்னை மேலும் மேலும் அழகு படுத்திக் கொண்டாலும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என அவனுக்கு எண்ணியது. கண்ணாடி முன் பலமுறை நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டான்.
சேச்சே… இது என்ன….? அவன் என்னைப் பார்க்கத்தானே வருகிறான்… அதுகூட நட்பு ரீதியில்…. அதுவும் நான் அழைத்த்தால்…. அவன் ஒரு பேரழகு வாய்ந்த ஆண்மை ததும்பும் அழகன். அவன் என்னை எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை…
அர்ஜூன் தன் கண்கள் வலிக்க கண்ணீர் துளிகளை வடித்தான். தன் வாழ்வு ராஜேஷின் கைகளில் மட்டுமே இனிமையாக் கழியும் என அவன் நம்பினான். ஆனால் அதை வெளிக் காட்ட இந்த பிறவியில் அவன் எதுவும் முயலமாட்டான். அவனுக்கு அத்துனை துணிச்சல் இல்லை.
காலை ஒன்பது மணியாக பத்து நிமிடம். அர்ஜூன் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. அர்ஜூன் ஓடிச்சென்று கதவுகளைத் திறந்தான். ராஜேஷ் எனும் ஆணழகன் அங்கு நின்றிருந்தான். அர்ஜூனின் கண்கள் அவனை மீறி அகல விரிந்தன. வாய் திறந்து கொண்ட்து. ஆயினும் எப்படியோ சமாளித்துக் கொண்டான். ராஜேஷின் நிலைமையும் சற்றேறக்குறைய அதேபோல் தான். அழகுப் பெட்டகமாக இருந்த அர்ஜூனை அப்படியே அள்ளி அவன் செவ்விதழ்களைக் கவ்விச் சுவைக்க அவன் மனம் விரும்பியது. அவன் மார்பு ஏக்கத்தில் விம்மியது.
“உள்ள வா, ராஜேஷ்”… அர்ஜூன் அழைத்தான்.
ராஜேஷை கூடத்தின் வழியே மாடியை நோக்கி அழைத்துச் சென்றான். தன் அறையில் நுழையும் முன் ராஜேஷ் அதற்கு முன்பு இருந்த அறைக்குள் நுழைந்தான். அது அர்ஜூனின் பெற்றோர் வாழ்ந்த அறை. அர்ஜூன் ராஜேஷின் பின்னாலேயே சென்று அந்த அறைக்குள் நுழைந்தான்.
ராஜேஷ் அந்த அறையில் இருந்த அர்ஜூனின் பெற்றோர் படங்கள் முன் நின்றான். திரும்பி அர்ஜூனைப் பார்த்தான்.
“அவங்க என் அம்மா அப்பா”… அர்ஜூன் சொன்னான்.
ராஜேஷின் மனம் ஒரு நொடி நெருப்பைத்தொட்டவனைப் போல் பதறியது. அவன் திரும்பி அர்ஜூனைப் பார்த்தான். அர்ஜூன் அடுத்த அறை மணி நேரத்தில் அவன் வாழ்க்கையின் பழைய நிகழ்வுகளை எல்லாம் ராஜேஷிடம் பகிர்ந்து கொண்டான். இடையிடையே அவன் கதறி அழவும் செய்தான். தன் தாயின் வேதனைகளைப் பகிர்ந்து கொண்ட போது அவன் மிகவும் வேதனைக்குள்ளானான்.
ராஜேஷ் ஒவ்வொருமுறை அர்ஜூன் அழுத போதும், புண்பட்டுப்போனான். அர்ஜூனின் மீது அளவிட இயலா அன்பும் காதலும் அவனுக்கு பெருகியது. வாழ்வில் யாருமில்லா தனிமரமாய் வாழும் அவனுக்கு தான் பெரும் ஆதரவாக இருக்க வேண்டும் அவன் ஏக மனதாய் முடிவு செய்தான். அர்ஜூன் அழுத போதெல்லாம் ஓடிச்சென்று அவனை அணைத்து தன் மார்போடு கிடத்தி அவனுக்கு ஆறுதல் தர வேண்டும் என விரும்பினான். அவன் கண்ணீர் துளிகளைத் துடைத்து ‘உனக்கு நானிருக்கிறேன்’ என சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு பெருகியது. தனக்கு தாய் தந்தை இல்லையென்றாலும் அண்ணன்மார் இருக்கிறார்கள். ஒரு பெயரளவிற்காவது இருக்கிறார்கள். ஆனால் அர்ஜூனோ தனிமையில் யாருமின்றி வயதான பாட்டி மட்டுமே ஆதரவாக இருக்க எவ்வளவு வேதனையில் இருக்கிறான். இப்போதுதான் அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, அர்ஜூன் ஏன் எப்போதும் ஒரு சோகத்திலேயே இருக்கிறான் என்று.
“அர்ஜூன், நீ எதற்காகவும் இனி வருத்தப்படக் கூடாது… உனக்கு நல்ல நண்பனாக நான் இருக்கிறேன். இனி உன்னை விட எனக்கு எதுவும் பெரிதில்லை… இனி ஒவ்வொருநாள் மாலையும் நான் உன்னுடன் தான் இருப்பேன்…. என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” ராஜேஷ் கேட்டான்…
“ராஜேஷ்…. நீ இந்த கேள்வி கேட்கவே வேண்டியதில்லை… அது நான் செய்த பெரும் பாக்கியம். இந்த உலகில் தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு உன் நட்பு மட்டுமே ஒரு பிடிப்பாக அமையும்”.. அர்ஜூனின் கண்களில் கண்ணீரின் தடங்கள்.
ராஜேஷும் அர்ஜூனும் அன்று முழுதும் பேசிக்கொண்டே இருந்தனர். பலப்பல விஷயங்களைப் பேசினர். ராஜேஷ் அர்ஜூனைப் புரிந்து கொண்டான். அர்ஜூன் ராஜேஷைப் புரிந்து கொண்டான். இருவரும் நட்பின் பரிமாணங்களை அளந்தனர். அர்ஜூன் சிரித்தான். என்றும் தன் வாழ்வில் சிரிக்காத அளவிற்குச் சிரித்தான். ராஜேஷின் இயல்பான உரிமையான நட்பில் அவன் அகமகிழ்ந்து முகமகிழ்ந்து சிரித்தான். அவன் சிரிக்கச் சிர்க்க ராஜேஷின் மனம் சலனத்தில் அழுந்தியது. அர்ஜூனின் அழகான சிரிப்பிற்காக ராஜேஷ் பலப்பல சாகசங்களைச் செய்தான். அர்ஜூன் சிரித்த போது ராஜேஷின் உறுதியான வைர நெஞ்சம் நெருப்பிலிட்ட நெய் போல உருகியது. அவன் ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான். அவன் சிரித்தபோது அந்த அழகிய முகத்தில் எழுந்த பேரொளி ராஜேஷை விட்டில் பூச்சி போல் கவர்ந்திழுத்தது. அந்த இன்பத்தில் ராஜேஷ் நனைந்தான். அர்ஜூனை தன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உறுதியாக ஏற்பட்டது. அவன் காத்திருக்க முடிவு செய்தான், வாய்ப்பு வரும் வரை….
அர்ஜூன் ராஜேஷ் அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும் தன் வாழ்வில் என்றும் அனுபவித்திராத ஒரு அமைதியை, நிம்மதியை, இன்பத்தை, பாதுகாப்பை உணர்ந்தான். இந்த உறுதியான ஆணின் கைகளில் தான் அடைக்கலம் ஆக வேண்டும் என்ற அவா அவனுக்கு ஏற்பட்டது. தன் வாழ்நாள் முழுதும் இவனுடனேயே கழிக்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் தான் எதையும் சொல்ல இயலாத நிலையில் அவன் இருந்தான். தவறான கருத்துக்கள் அவனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும். ராஜேஷின் நட்பைக்கூட இழக்க நேரிடலாம். அவன் அதை விரும்பவில்லை. இப்பொதைக்கு கிடைத்தற்கரிய பெரும் பாக்கியமாக ராஜேஷின் நட்பு கிடைத்துள்ளது.
இருவரும் நேரமாகிவிட்டதை உணர்ந்தனர். மாலை எனும் வேளை வந்து அவர்களைப் பிரிக்க ஆயத்தமானது. ராஜேஷும் அர்ஜூனும் ஒருவருக்கொருவர் செல் போன் எண்களைப் பரிமாறிக்கொண்டனர். கடைசியாக இருவரும் அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர்.
“அர்ஜூன், நீ எப்போதும் இனிமே கலங்கக்கூடாது. நீ இனிமே என் ஃப்ரெண்ட். அத மறந்துடாத…” ராஜேஷ் பேசிக்கொண்டே அர்ஜூனின் அருகில் வந்தான். அவனுடைய கைகள் அர்ஜூனின் முகத்தை ஏந்தின. அர்ஜூன் இதயம் மார்புக்கூட்டைப் பிய்த்தெறிவது போல் துடித்தது. ராஜேஷ் அர்ஜூனின் உச்சி முகர்ந்தான். அது முழுக்க முழுக்க நட்பு ரீதியிலான முத்தம் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது.
“பை அர்ஜூன்…” ராஜேஷ் சென்றுவிட்டான்.
அர்ஜூன் வெகுநேரம் அந்த முத்தமிடப்பட்ட இடத்தை தடவிக்கொண்டே இருந்தான். அது தன் இதழாக இல்லையே என்ற வருத்தம் அவனுக்கு இல்லாமலில்லை. முத்தமிடப்பட்ட இடம் இன்னும் சூடாக ஈரமாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. ராஜேஷின் இதழ்கள் தன் நெற்றியில் பதிந்த அந்த நொடிகளை எண்ணி அவன் உள்ளம் பெருமூச்செறிந்தது. சற்று முகம் தூக்கி அவன் இதழ்களை காட்டாமல் போனதாக தன்னைத் தானே நொந்துகொண்டான்.
தனது மொபைல் போனை எடுத்தான். ஏற்கனவே இரண்டு தகவல்கள் வந்திருப்பதைக் கண்டான். அதை பிரித்ததும் அது ராஜேஷிடமிருந்து வந்த தகவல்கள் என அறிந்து கொண்டான்.
முதல் தகவல்:
“ஹாய்… டியர்… என்ன பண்ற?”
இரண்டாம் தகவல்:
”சாப்டாச்சா?”
முதலாவதாக தன்னை ராஜேஷ் டியர் என அழைத்ததை எண்ணி புளகாங்கிதம் அடைந்தான். தன் மீது அவன் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தான் என நினைத்து மகிழ்ந்தான். ஆனால், இந்த அக்கறை உண்மையான அக்கறைதானா என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தைத் தீர்க்கும்படியான ஒரு சம்பவம் கூடியவிரைவில் நிகழப்போவதை அவன் அறிந்திருக்கவில்லை…

காதலெனும் கடைத்தெருவில் எனக்கு
முத்தங்கள் விற்றவனே….!
நீ, சூடான இதழ் பதித்து என்
வாடா மலரான வதனத்தைச்
சுவைத்தாயே… தேடாமல் கிடைத்த
தேன் போல நீ வண்டாய் மாறி
குடித்தாயே…. நாடாமல் என்னை
நலிவு கொள்ளச் செய்வாயோ என்ற
எண்ணம் என் உள்ளத்தில் எழுந்து
உன்னைக் கண்டாலே போதும்
காதல் தரவில்லையென்றாலும் என
தனக்குத் தானே ஆறுதல் சொல்லும்.
என் காதலா…!
நெற்றியில் முத்தமிட்டாய்
நெருப்பு மூட்டிவிட்டாய்
என் இதழ்களை எடுத்துக்கொண்டு
இன்பம் வழங்கமாட்டாயா..?


(தொடரும்)….. 
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.