குறிப்பு: இக்கதையின் பாத்திரப் படைப்புகள் யாவும் கற்பனையே. நிகழ்வுகள் சில என் சொந்த அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடப்படும் நபர்கள் யாவரும் கற்பனை. கதையில் சூடான உடலுறவுக் காட்சிகள் இருக்காது. இரு இளைஞர்களுக்கிடையேயான மெல்லிய காதலைப் பற்றி சொல்லும் கதை.
-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 1.
----------------------------------------------------------------------------------------------------------
எப்போதும் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும் அந்த காலை நேரப் பறவைக் கூட்டத்தைக் காண யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் நேரம் தான் நம்மைக் கண்டுகொள்ளாமல் பறந்து செல்கிறது. நம்மைப் பற்றி நேரத்திற்குக் கவலை இல்லை. அப்படித்தான் அர்ஜூன் எப்போதும் நினைத்துக் கொள்வான். அவன் படுக்கையறையின் சாளரங்கள் வழியே பறவைகளின் குரல் கேட்கும் அந்த நொடியே அவன் விழித்துக் கொள்வான். ஆனால் அவற்றை பொறுமையாக ரசித்து வேடிக்கைப் பார்க்க அவனுக்கு நேரம் தான் இல்லை. அவன் ஒரு மென்பொருள் பொறியாளர் (Software Engineer). காலையில் அவன் கிளம்பி வேக வேகமாக ஓடவேண்டும். இல்லையெனில் எல்லாம் தாமதமாகி அன்றைய பொழுது அவனுக்கு வீண் பொழுதாகிவிடும். அவன் மெதுவாகக் கண்களைத்திறந்து கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 7 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் எழுந்து அமர்ந்து கண்களைத் தேய்த்துக் கொண்டான்.
நாம் சற்று நெருங்கிச் சென்று அர்ஜூனின் அங்க அடையாளங்களை நோக்குவோம். அர்ஜூன், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், தமிழனல்ல. குஜராத்தி. ஆனால் அவன் தமிழ் நன்றாக எழுத படிக்க தெரிந்தவன். அதனால் அவனை யாரும் குஜராத்தி என சந்தேகிக்க இயலாது. அவன் முகம் மிக அமைதியான அப்பாவியான முகம். 21 வயதே நிரம்பிய அவன் இளவயது முகத்தில் அழகு தாண்டவமாடியது. அவன் நெற்றி பரந்திருந்தது. அவன் புருவங்கள் அடர்த்தியாக கருநிற ரோமங்கள் வளர்ந்து அவன் வெளிர் முகத்தில் அழகூட்டியது. அவன் நாசி நேர் நாசி. அவன் உதடுகள் இளநீரில் ஊறிய ரோஜா இதழ்களைப் போல மிளிர்ந்தது. அவன் கன்னம் பருவத்தின் வனப்பில் கொழுத்திருந்தது.
அவன் எழுந்து நின்றதும் அவன் உடல் மீது சூரிய ஒளிக்கற்றைகள் விழுந்து அவனை ஒளியில் நனைத்தன. அவன் மேலுடம்பில் அக்குளைத்தவிர வேறெங்கும் முடிகள் இல்லாதிருந்தது. அவன் மார்பு சற்று புடைத்திருந்தது. அவன் ஒல்லியான தேகமுடையவன். அவன் உயரமோ சராசரியை விட சற்றுக் குறைவு. அவன் மெதுவாக தன் கால் சட்டையைத் தேடி அதை அணிந்து கொண்டு, குளியலறையில் இருக்கும் கண்ணாடி முன் சென்று தன் முகத்தைப் பார்த்தான். அவனையும் மீறி ஒரு சிறு புன்னகையும் ஒரு சிறு பெருமூச்சும் வெளியேறியது.
அடுத்த அரை மணி நேரத்தில் படுக்கையறையின் கண்ணாடி முன் அர்ஜூன் இடுப்பில் துண்டுடன் குளித்து முடித்த கோலத்தில் நின்றிருந்தான். அவன் உடல் சற்று சிலிர்த்திருந்தது. மெதுவாக தன் இடுப்புத் துண்டை கழற்றி வீசிவிட்டு தன் நிர்வாண உடலழகை கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொண்டிருந்தான். கண்ணாடியும் அந்த அழகை கண் கொட்டாமல் பார்த்து அவனுக்குப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அவன் முகம் மிக ஆழ்ந்த சிந்தைனையில் அவன் இருப்பதை உணர்த்தியது. அவன் தன் உடல் மீது தன் கைகளால் வருடினான். பெருமூச்சு விட்டான். சட்டென அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவன் கன்னங்களில் வழிந்தோடியது. பின் மெதுவாக விட்டெறிந்த துண்டை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆடை அணிந்து அலுவலகம் செல்ல தயாரானான்.
படிக்கட்டு வழியாக இறங்கி வரும் போது அவன் வீட்டைக் கவனித்தால் அவன் உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பது புலப்படும். அவன் நேராக ஒரு சிறு அறையை நோக்கிச் சென்றான். அங்கு பல கடவுள் படங்களும் சிலைகளும் நேர்த்தியாக பூக்கள் அணிவிக்கப்பட்டு இருந்தன. ஒரு மூலையில் இரு பெரிய படங்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊதுபத்தி கொளுத்தப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெரியவரும், பெண்மனியும் இருந்தனர். அர்ஜூன் நேராக அந்தப் படங்களின் அருகில் சென்று வணங்கினான். பின் அந்தப் படங்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கண்ணீர் வெள்ளமாயிருந்தன. அந்த இருவரும் அவன் தாய் தந்தை.
அர்ஜூனின் பள்ளி நாட்கள் மற்ற குழந்தைகளைப் போலில்லை. அவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவன் தாய் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையாகிவிட்டாள். எப்போதும் அர்ஜூன் அவள் அருகிலேயே இருப்பான். அவன் தாய் படும் எல்லா வேதனையையும் அவன் பார்த்து அளவிலா வேதனைப்பட்டான். இரவில் உறக்கம் இன்றி எப்போதும் அழுது கொண்டிருப்பான். அர்ஜூனின் அப்பா மிகவும் உத்தமர். அவர் மனைவியின் வேதனையைக் குறைக்க அவரால் ஆனவற்றை செய்துகொண்டிருந்தார். ஆனால் ஒருநாள் அந்தப் புண்ணியவதி போய்ச்சேர்ந்து விட்டாள். அன்று அர்ஜூனைக் காட்டிலும் அவன் அப்பா அழுத அழுகையை யாரும் நினைத்துக் கூட பார்க்க இயலாது. அர்ஜூன் தாயில்லாப் பிள்ளையானான். அவன் பாட்டிதான் அதன் பிறகு அவனை வளர்த்தார்.
அர்ஜூனின் அப்பா தன் மனைவியின் இறப்பிற்குப் பின் எல்லையில்லா துயரத்திலேயே வாழ்ந்தார். எப்போதும் கவலையும் நோயும் அவரது பிரிக்க இயலாத சகாக்கள் ஆயின. அர்ஜூன் முடிந்தவரை அப்பாவுடன் நெருக்கமாக இருக்க முயற்சித்தான். ஆனால் அவர் யாரைப் பற்றியும் அக்கறையின்றி கடமைக்காக வாழ்ந்தார். அர்ஜூன் பொறியியற் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போது அவன் தந்தையும் பூவுலக வாழ்வை நீத்தார். அர்ஜூன் தாயும் தந்தையும் இல்லாத அனாதையானான். அவன் பாட்டிதான் அவந்து ஒரே ஆதரவு. அவன் தந்தை அவனுக்காக சேர்த்து வைத்திருந்த சொத்து ஏராளம். எனவே அவர்கள் வாழ்வு குறைவின்றி நகர்ந்தது.
அர்ஜூன் தனது இளம் வயதில் அனுபவித்த இந்த வேதனைகளுக்கிடையில் மற்றொரு வேதனை அவனை வாட்டி வதைத்தது. ஆம், அவனது அந்தரங்கம் அது. அவன் மனம் மற்ற இளைஞர்களைப் போல் பெண்கள் மீது செல்லவில்லை. அவன் ஆண்களை விரும்ப ஆரம்பித்தான். அதிலும் உயரமான, மாநிறமான தமிழ் இளைஞர்களைக் கண்டால் அவனுக்கு எல்லாம் மறந்து விடும். இவன் குள்ளமாக சிவப்பாக மிருதுவான வழுவழுப்பான நளினமான தேக அமைப்பு உடையவன். எனவே உயர்ந்த, மாநிறமான, உறுதியான, ரோமக்கட்டுடைய, ஆண்மையான ஒருவனைக் கண்டால் மெய்மறந்து போவான். ஆனால், இதுவரை யாருடனும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. ஒருநாள் கூடி, மறுநாள் பிரியும் தேனீ வாழ்க்கையில் இவனுக்கு ஈடுபாடு இல்லை. ஒருவனைப் பார்த்து, உருகிக் கரைந்து, காதலித்து, அவனுடன் பேசி, சிரித்து, சண்டையிட்டு, அழுது, கோபப்பட்டு, கேலி செய்து, அவன் இல்லாவிட்டால் வாழ்வே வெறுமை என நினைக்கும் அளவு பழகி பின் அவனுடன் வாழ்வதில்தான் அர்ஜூனுக்கு விருப்பம்.
இந்தச் சமூகம் சிக்கல்கள் நிறைந்தது. இவன் மனநிலையை அறியாதது, புரியாதது. எனவே அர்ஜூன் சமூகத்திற்குப் பயந்தான். விளைவு, அவன் அதிகமாக யாருடனும் பேசியதோ, பழகியதோ இல்லை. எப்போதும் அமைதியாக இருக்கும் அவனை ரொம்ப தனிமை விரும்பி என நினைத்தனர். யாரும் அவனை அதிகமாக தொந்தரவு செய்தது இல்லை. அவன் அழகில் மயங்கி ஒன்றிரண்டு பெண்கள் அவனை அணுகியபோதும் அவன் யாரையும் நெருங்கவிடுவதில்லை என்பதை அறிந்து ஒதுங்கிக் கொண்டனர். ஆக மொத்தம் அவன் யாருக்காகவோ காத்திருந்தான். அர்ஜூனுக்கும் அவன் மனதுக்கும் மட்டுமே தெரியும் அவன் காத்திருக்கும் நபர் எப்படி இருப்பார் என்று.
காதல் என்பது என்ன என்று யாரால் தான் சொல்ல முடியும்? நம் மனதும் அதில் உள்ள விருப்பங்களும் சிலரைத் தேடுகிறது. அத்தேடல் முடியும் இடத்தில் தான் நம் மனதைக் கவர்ந்த அந்த ஒருவர் இருக்கிறார். அவர் தான் நம் காதலன் / காதலி ஆக மாறுகிறார். அர்ஜூனுக்கும் அந்தத் தேடல் உண்டு. தன்னை ஒருவனிடத்தில் ஒப்புவிக்க வேண்டும். அவனுக்கு தன்னையே அடிமை செய்துவிட வேண்டும் என அவன் உள்ளத்தில் அணையாத ஒரு நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. ஆனால், அவன் தனிமையும், பயமும், தாழ்வு மனப்பான்மையும் அவனை தினம் தினம் கொன்று கொண்டிருந்தது. அவன் தன்னை இந்த சூழலில் இருந்து காக்கப் போகும் அந்த ஆண்மகனுக்காக காத்திருந்தான்.
“அர்ஜூன்....” அவன் பாட்டி அவனை அழைக்கும் குரல் கேட்டு தன் பெற்றோர் படம் முன் நின்றிருந்த அர்ஜூன் சற்று அசைந்து கொடுத்தான்.
“என்ன பாட்டி?” அர்ஜூன் குரல் கொடுத்துக் கொண்டே, சாப்பாட்டு மேசையின் அருகில் வந்தான்.
“சாப்பிட்டு விட்டுப் போ” பாட்டி தளர்ந்த குரலில் சொன்னாள். அவளுக்கு வயது 70ஐக் கடந்து விட்டது. பேரனைப் பற்றிய கவலையும் அவள் பிள்ளையின் குடும்பம் இப்படி சிதைந்தது பற்றிய கவலையும் அவளை மிகவும் தள்ளாதவளாகச் செய்திருந்தது.
“சரி பாட்டி”... அர்ஜூன் அமைதியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.
அவர்கள் இருந்த வீடு கூடுவாஞ்சேரியில் இருந்தது. தனது இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு தாம்பரம் வழியாக தன் அலுவலகம் செல்லத் தயாரானான். அவன் வீடு இருந்த தெருவின் முனையில் திரும்பி அடுத்த தெருவுக்குச் செல்ல எத்தனித்த போது, அவன் அந்தக் காட்சியைக் கண்டான். ஒரு இளைஞன். தமிழ் இளைஞனாகத்தான் இருக்க வேண்டும். நல்ல ஆறு அடி உயரம், ஆண்மை ததும்பும் முகம்... கட்டமைப்பான உடல்... அவன் இதழில் இழையோடும் புன்னகை... கைகளை காட்டி அர்ஜூனை நிற்கும் படி சமிக்ஞை செய்தான். அர்ஜூன், அந்த இளைஞனின் அழகை ரசித்த படியே வண்டியை நிறுத்தினான்.
“ஹை... ஐயாம் ராஜேஷ்... கொஞ்சம் பஸ் ஸ்டாப் வரைக்கும் லிஃப்ட் தரமுடியுமா?” அவன் புன்னகையுடன் கேட்டான்...
அர்ஜூன் அப்படியே அவனைப் பார்த்தபடி சிலை போல் இருந்தான். அவன் மனது சொல்லியது... “அர்ஜூன் உன் தேடல் முடியப்போகிறது” என்று......
(தொடரும்.....)
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.
-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 2
----------------------------------------------------------------------------------------------------------
வீட்டின் சத்தங்களால் அவன் காலைத்தூக்கம் கலைந்து விட்டது. அவன் சற்றே எரிச்சலுடன் எழுந்தான். ஆனால் அவன் காலருகில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டுவயது வருணைக் கண்டதும் அவன் எரிச்சல் எல்லாம் பறந்துவிட்டது. வருண் மெல்லக் கண் திறந்து அவனைப் பார்த்தான்….
“சித்தப்பா…..” அவன் மழலை மொழியில் தன் உலகம் முழுதும் பூக்கள் மலர்வது போல் உணர்ந்தான் ராஜேஷ்.
“செல்லக்குட்டி…. எப்ப வந்து சித்தப்பா பக்கத்துல படுத்த?” அவன் கேட்டான்.
“நான், நேத்து லாத்திலியே வந்தேன்….” வருண் மழலை மொழி.
’ர’கரம் உச்சரிக்க இன்னும் அவன் பழகவில்லை. யார் அவனது பெயர் கேட்டாலும் “வலுண்” என்றே சொல்வான்…
ராஜேஷ், 21 வயது நிரம்பிய இளைஞன். ஆறடி உயரம், தமிழ் நிறம். அரும்பு மீசையுடன் களைபொருந்திய முகம். சிரித்தால் வெண்பற்கள் தெரியும். கட்டமைந்த உடல். நல்ல பலசாலி. இயந்திரவியற் பொறியியல் (Mechanical Engineering) படித்தவன். அவந்து தந்தையும் தாயும் அவன் சிறுவனாய் இருந்தபோதே காலமாகி விட்டனர். அவந்து பெரிய அண்ணா மற்றும் சின்ன அண்ணா ஆதரவில் வளர்ந்தவன். அவர்கள் எல்லாரும் ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். நல்ல வசதியான குடும்பம். ராஜேஷை யாரும் அவ்வளவாக கண்டு கொள்ளமாட்டார்கள். வீட்டில் இரு அண்ணிகளும் அவரவர் ஆலாபனைகளில் மும்முரமாக இருப்பர். வீட்டு வேலைகள் செய்ய பல வேலையாட்கள் உண்டு.
ராஜேஷ் யாருடனும் வீட்டில் அவ்வளவாக பழக் மாட்டான். அவனது ஒரே பொழுதுபோக்கு, அவனது சின்ன அண்ணா மகன் வருண் தான். ஆனால் வெளியில் ராஜேஷுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவன் ஒரு கலகலப்பான ஆள். நட்பில் சிறந்தவன். யாருக்கும் எந்த உதவியும் செய்வான். எப்போதும் தன்னம்பிக்கை நிறைந்தவன் என்ற பெயர் அவனுக்கு உண்டு. அவன் எதிலும் அஞ்சாமல் ஈடுபடக்கூடியவன். ஆனால் நல்லதல்ல என நினைத்த ஒரு காரியத்தை அவன் செய்ய மாட்டான். ராஜேஷ், ஒரு தன்னம்பிக்கை நிறைந்த ஆற்றல் மிகுந்த அழகிய ஆண்மை ததும்பும் நவயுக இளைஞன்.
யாருக்கும் தெரியாத ஒரு பிரச்சினை ராஜேஷின் அடி மனதில் இருந்து கொண்டுதான் இருந்தது. அதை அவன் எப்போதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்றாலும், தனிமையில் இருக்கும் நேரங்களில் அவனை அப்பிரச்சினை மிகவும் வாட்டியது. ஆம், அவன் ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பி. ஆனால் அவன் எந்த ஆடவனையும் இதுவரை தொட்டதில்லை. அவனைப் பொறுத்தவரை, அவனுக்காக படைக்கப்பட்டிருக்கும் அந்த ஒருவனுக்காக அவன் காத்திருந்தான்.
இந்த நிலையில் அவர்கள் குடும்பம் கூடுவாஞ்சேரியில் ஒரு பெரிய பங்களா பார்த்து குடியேறியது. அவர்கள் வந்து மூன்று நாட்களே ஆகியிருந்தது. வீட்டில் இன்னும் எல்லா பொருள்களையும் அடுக்கும் பணி முடியவில்லை. ராஜேஷ் எழுந்து தன் காலைப் பணிகளை முடித்து விட்டு, வெளியே வந்த போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அவன் இருசக்கர வாகனம் பழுதாயிருந்தது. தன் நினைவுமறதியை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான். வீட்டில் இருந்த மூன்று கார்களும் வெளியில் சென்றுவிட்டது. அவன் தன் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். வெளியே வந்து சாலையில் நின்று ஏதேனும் ஆட்டோ வருகிறதா என பார்த்தபோது ஒரு இருசக்கரவாகனம் வருவது தெரிந்தது… அதில் வரும் இளைஞன் முகம் தெரியாத அளவிற்கு தலைக் கவசம் அணிந்திருந்தான். ராஜேஷ் சற்றே ஏமாந்து போனான். இருப்பினும் கையை ஆட்டி வண்டியை நிறுத்துமாறு சைகை செய்தான்.
“ஹை... ஐயாம் ராஜேஷ்... கொஞ்சம் பஸ் ஸ்டாப் வரைக்கும் லிஃப்ட் தரமுடியுமா?” அவன் புன்னகையுடன் கேட்டான்...
அந்த இளைஞனோ சற்று தடுமாறியதாகத் தோன்றியது. இருந்தாலும் இவனை ஏற்றிக் கொண்டான். ராஜேஷின் மனது ஏனோ ஒரு பெரிய சஞ்சலத்திற்குள்ளானது. ஏதோ ஒரு இனம்புரியாத உணர்ச்சி அவனை ஆட்கொண்டது. அவன் குழம்பிப் போனான். எங்கோ அருகில் அவன் தேடும் ஒருவர் இருப்பதைப் போன்ற உணர்வு. அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பஸ் ஸ்டாப் வந்தது. ராஜேஷ் இறங்கிக் கொண்டான். ஆனால் அர்ஜூன் இன்னும் தன் தலைக்கவசத்தை கழற்றவே இல்லை. ஆம்... ராஜேஷ் ஏறி வந்தது அர்ஜூனின் வண்டியில்தான்.
“ஓ... சரி... ரொம்ப தாங்க்ஸ்... பை த பை, உங்க பேரு என்னனு நீங்க சொல்லவே இல்லையே?” ராஜேஷ் கேட்டான்.
“அ...அ...அர்ஜூன்”, அவன் தயக்கத்துடன் பதிலளித்தான்.
“ஓகே... சீயூ சம் அதர் டைம், தாங்க்ஸ் ஒன்ஸ் அகைன்...” ராஜேஷ் சென்றுவிட்டான்.
அர்ஜூனின் மனது அவன் பின்னாலேயே சென்றது. ராஜேஷ் அர்ஜூனின் வண்டி எண்ணை மனப்பாடம் செய்து கொண்டது அர்ஜூனுக்குத் தெரியாது. அர்ஜூன் வண்டியை முடுக்கி அலுவலகம் சென்றான்.
அன்று ஒருநாள் முழுதும் அர்ஜூன் மனது எதிலும் முழுமையாக ஈடுபடவில்லை. காலையில் பார்த்த இளைஞனின் மீதே அவன் எண்ணங்கள் சென்றன.
இது என்ன? என் மனம் ஏன் அவன் மீதே ஈடுபடுகிறது. சேச்சே... அவன் யாரென்றே தெரியாது.. அவனும் நம்மைப் போல்தானா தெரியவில்லை... ஏய்... முட்டாள் மனமே... அவனை மறந்து விட்டு வேலையைப் பார்.... இல்லையேல் வீணாய் வருந்துவாய் பிறகு...
அர்ஜூனின் மனம் அடித்துக் கொண்டாலும் அவன் வேறுவழியின்றி அப்படியே தனது வேலைகளை முடித்தான். அன்று இரவு ஏதோ பலவித சிரமங்களுக்குப் பிறகு உறங்கினான். மறுநாள் காலை எழுந்தவுடன் அவன் நினைவுக்கு வந்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று நேற்று பார்த்த இளைஞனின் நினைவு, மற்றது இன்று புதன் கிழமை, ஓட்டப்பயிற்சிக்கு (Jogging) செல்ல வேண்டும். அவன் வேகமாக எழுந்து பயிற்சிக்குத் தயாரானான். வீட்டின் வெளியே வந்து வெளிக்கதவை திறந்த போது அவன் எதிரில் ராஜேஷ் நின்றிருந்தான். ராஜேஷும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் என்பது அவன் உடைகளில் இருந்தே தெரிந்தது. அர்ஜூன், ராஜேஷைக் கண்டதும் தன்னை மறந்து புன்னகைத்தான். ராஜேஷும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு அர்ஜூனின் இருசக்ர வாகனத்தை சுட்டிக்காட்டினான்.
“இந்த வண்டி…..” என்று இழுத்தான்.
“என்னுடையதுதான் ராஜேஷ்…” அர்ஜூன் பதில் சொன்னான். யாருடனும் அர்ஜூன் இப்படி பேசியது கிடையாது. அவனுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.
“அப்ப… நேத்து காலைல என்ன ஏத்திக்கிட்டு போனது……?”
”அஃப்கோர்ஸ் நான் தான்…. ஹெல்மெட் போட்டிருந்ததால உங்களுக்கு என் ஃபேஸ் தெரிஞ்சிருக்காது”… அர்ஜூன் சொன்னான்.
”ஓ… ரைட்… அது சரி… நீங்க தினமும் ஜாக்கிங் பண்ணுவீங்களா?” ராஜேஷ் கேட்டான்… இருவரும் மெதுவாக ஓடத்துவங்கினர்…
“இல்ல… தினமும் இல்ல… திங்கள், புதன், வெள்ளி மட்டும்” அர்ஜூன் சொன்னான். அவ்வாறு சொல்லிவிட்டு ராஜேஷின் முகத்தைப் பார்த்தான்… அதில் இழையோடும் புன்னகையைப் பார்த்து அவன் மனது வேகமாகத் துடித்தது.
“நீங்க எப்படி?” அர்ஜூன் ராஜேஷைக் கேட்டான்.
“ஆக்சுவலி, நான் இந்த ஏரியாவுக்கு குடி வந்து மூணு நாள் தான் ஆகுது, ஆனா நான் தினமும் ஜாக்கிங் பண்றதுதான் வழக்கம்” ராஜேஷ் சொன்னான்.
அர்ஜூன் உடனே சொன்னான் “உண்மையிலேயே எனக்கும் டெய்லி போகனும்னுதான் ஆசை… ஆனா தனியா ஓட பிடிக்கலை…. அதனால தான் மூணு நாள் மட்டும் போறேன்”…
“அதனால என்ன? இப்பதான் நான் இருக்கேன்ல… தினமும் வாங்க… நாம ஓடலாம்…” ராஜேஷ் ரொம்ப சாதாரணமாகச் சொன்னான்.
அர்ஜூனின் உடல் முழுதும் இப்போது சிலிர்ப்பின் உச்சம். இந்த வார்த்தைகள் அவனது செவியில் தேன் பாய்ந்தாற் போலிருந்தன.
“உண்மையாவா… நான் வரலாமா?” அர்ஜூன் மீண்டும் உறுதி செய்து கொள்ள நினைத்துக் கேட்டான்.
“ஆமா… உறுதியா சொல்றேன்… வா அர்ஜூன்… நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாக்கிங் போகலாம்…. இன்னைல இருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ்…. ஓகே?”…. ராஜேஷின் யதார்த்தமான இனிமையான குணம் வெளிப்பட்டது.
“ஓகே…” அர்ஜூன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான். அவன் வேறு வார்த்தைகளைச் சொல்லும் நிலையில் இல்லை. அவன் தன் வாழ்வில் கிடைத்த பெரும் பேறாக இதைக் கருதினான். ராஜேஷ் ஏற்கனவே அர்ஜூனின் உள்ளத்தில் வந்துவிட்டான். இப்போது இன்னும் உறுதியாக ஒரு இடத்தைப் பிடித்து விட்டான்.
முடிவே தெரியாத ஒரு ஆழப் பள்ளத்தைப் போல், இந்த உணர்ச்சிகளும் அர்ஜூனை எங்கோ தள்ளிவிட்டது. அவன் இதிலிருந்து மீண்டு வர விரும்பவில்லை…. அடுத்த நாள் காலை வரை காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம் அவன் நெஞ்சை அறுத்தது. ராஜேஷின் மனநிலையை அர்ஜூன் அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால் நிலைமை வேறுமாதிரி ஆகியிருக்கும்….
(தொடரும்)
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.
very nice... natural feelings way of exposing is really super... thanks
ReplyDelete