குறிப்பு: இக்கதையின் பாத்திரப் படைப்புகள் யாவும் கற்பனையே. நிகழ்வுகள் சில என் சொந்த அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடப்படும் நபர்கள் யாவரும் கற்பனை. கதையில் சூடான உடலுறவுக் காட்சிகள் இருக்காது. இரு இளைஞர்களுக்கிடையேயான மெல்லிய காதலைப் பற்றி சொல்லும் கதை.
-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 3
----------------------------------------------------------------------------------------------------------
ராஜேஷின் மனநிலை, அல்ல அல்ல, மனம் அவனுக்கு ஒருநிலையில் இல்லை. அன்று காலை அவன் அந்த வீட்டின் முன் அந்த வண்டியைக் கண்டதும், சற்று நின்றான். அதே சமயத்தில் அந்த வீட்டின் கதவு திறந்து கொண்டு அர்ஜூன் வெளியே வந்தான். ராஜேஷ் இது வரை எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறான். தன் நண்பர்கள் பலரை நிர்வாணமாகக் கூடக் கண்டிருக்கிறான். ஆனால் யார் மீதும் அவன் மனம் இப்படிச் சென்றதில்லை. அர்ஜூனைக் கண்ட அந்த நொடிப்பொழுதிலேயே அவன் மனம் அர்ஜூன் பின்னால் சென்றுவிட்டது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ராஜேஷ் தற்போது சில நாட்களாக கனவில் ஒரு இளைஞனின் உருவத்தைக் கண்டு வருகிறான். சற்று குள்ளமாக, சிவந்த, அழகிய, அப்பாவியான ஒரு இளைஞனின் முகம், அதிலே கண்ணீர்… ராஜேஷ் அந்தக் கண்ணீரைத் துடைக்க நினைப்பான்… அதற்குள் கனவு கலைந்துவிடும். எங்கோ வாழ்க்கையின் பெரும் துயர்களை கண்டிருந்த ஒரு இளைஞனுக்கு தான் ஆறுதல் வழங்க வேண்டும் என நினைத்திருந்தான்.
இப்போது இதோ தன் கனவில் கண்டவன் நேரில் வந்து நின்றதும் எப்படி இருக்கும் அவனுக்கு…..? அவன் மனது இந்த முறை அவனை மீறித் துடித்தது. அவனால் அதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதற்கு வசதியாக தினமும் காலை இவனைப் பார்க்கும் வாய்ப்பும் இப்போது கிடைத்து விட்டது. இதைப் பயன்படுத்தி இவனை நண்பனாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவு செய்தான்.
வாழ்வின் சூட்சும விளையாட்டுகள் விதியின் வழி ஏற்படுபவை. இதோ இரு ஆன்மாக்கள் சந்தித்துக் கொண்டன. அவை இரண்டும் ஒன்றை ஒன்று தேடித்தான் இந்த உலகில் வாழ்கிறது. ஆனால் விதிவசத்தால் அவை இன்னும் ஒன்றையொன்று அடையாளம் காணவில்லை. ஆயினும் இந்த நிகழ்வுக்கான முன்னெற்பாடுகள் துவங்கி விட்டன. இந்த ஆன்மாக்கள் காதலில் சங்கமிக்கும் போது இந்த பிரபஞ்சமே பேரின்பம் கொள்ளும். காதலைத் தேடும் இந்த இரு இளைஞர்களும் தாங்கள் தேடுவது ஒருவரையொருவர் தான் என்று இன்னும் அறிந்து கொள்ளவில்லை. நாம் அந்த முயற்சியில் ஈடுபட இயலாது. இது விதி விளையாடும் நாடகம். இறுதியில் இவர்கள் கண்டுகொள்வார்கள் என்றே நாம் நம்பவேண்டியுள்ளது இப்போது.
அர்ஜூனும் ராஜேஷும் ஜாக்கிங்கில் நண்பர்களாகி ஒரு வாரம் கழிந்தது. தினமும் காலையில் இருவரும் ஒருவரையொருவர் திருட்டுத்தனமாகப் பார்த்து பெருமூச்சுவிடுவதிலேயே இருந்தனர். சனிக்கிழமை வந்தது. அன்று காலை, அர்ஜூன் எழுந்ததும் ஜாக்கிங் செல்ல ஆயத்தமானான். அவன் மனதில் ஒரு யோசனை உதித்தது. அதாவது மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, எனவே ராஜேஷை தனது வீட்டுக்கு அழைக்கவேண்டும் என்பதுதான் அது.
“குட்மார்னிங் அர்ஜூன்…” அர்ஜூன் தனது வீட்டுக் கதவை திறந்ததும் எதிரில் ராஜேஷ் நின்றிருந்தான். அர்ஜூன் ஒரு புன்னகையுடன் “குட்மார்னிங் ராஜேஷ்” என்றான்.
ராஜேஷ் தன் கருநிற விழிகளை அப்படியே பெரிதாக்கி அர்ஜூனின் அழகை அள்ளிப் பருகினான். அந்தக் காலை வேலையில், அழகிய வெண்ணிற டீஷர்ட்டும் கருநிற ரெக்ஸின் ஜாக்கிங் சூட்டும் அணிந்திருந்த அந்த அழகிய கந்தர்வனின் முகத்தைப் பார்த்ததும் ராஜேஷ் உடல் முழுதும் ரத்தம் சூடாவதை உணர்ந்தான். தன் இரு வலிமையான கைகளாலும் அந்தக் குட்டி தேவதையை தூக்கி எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. மிகவும் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை உதறினான். தான் எந்தக் காரணம் கொண்டும் ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பி என அர்ஜூனுக்குத் தெரியப்படுத்தக் கூடாது. அவ்வாறு தெரியப்படுத்தினால் அவன் நம் நட்பை உதறிவிடுவான் என ராஜேஷ் நம்பினான். அவன் அர்ஜூனின் நட்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் இழக்க விரும்பவில்லை.
அர்ஜூன் ராஜேஷின் அழகில் லயித்திருந்தான். ராஜேஷின் கட்டமைப்பான உடல் அவன் ஓடும் போது அழகாக அசைந்துகொடுத்தது. இந்தக் காட்சியால் அர்ஜூனின் உள்ளம் வேகமாக அசைந்துகொடுத்தது. தன்னை அவன் வலிமையான கைகளால் தூக்கி மார்போடு அணைத்துக் கொள்ள மாட்டானா…. என்ற ஆசை அர்ஜூனை வந்து ஆட்கொண்டது. ஆனால் அந்த ஆசையை அவன் உடனே அழித்துக் கொள்ள முயன்றான். ஏனெனில், ராஜேஷ் போன்ற ஒரு ஆண்மை ததும்பும் இளைஞன் ஓரினச்சேர்க்கை விரும்பியாக இருக்க வாய்ப்பில்லை. மேலும், தன்னைப் பற்றி தெரிந்தால் அவன் தன்னுடைய நட்ப்பை முறித்துக் கொள்வான். எனவே, இப்போது அர்ஜூனுக்கு முக்கியம் ராஜேஷின் நட்புதான். அதனால் அவன் அமைதி காக்க முடிவு செய்தான்.
இங்கனம் இருவரும் அமைதி காக்க முடிவு செய்ததை விதியெனும் விளையாட்டுப் பிள்ளை பார்த்துச் சிரித்தது. இவர்கள் வாழ்க்கையை ஒன்றாக்க மேலும் பல வாய்ப்புகளை உருவாக்க அது முடிவு செய்தது.
“ராஜேஷ், நான் ஒன்னு சொல்லட்டுமா?” அர்ஜூன் தயங்கியவாறே கேட்டான்.
“அர்ஜூன், அதாவது நாளைக்கு நான் உன் வீட்டுக்கு வரவேண்டும்… அதானே?” ராஜேஷ் கேட்டான்.
“கரெக்ட்… அதே தான்…”, அர்ஜூன் சொன்னான். தான் சொல்லவந்ததை அவன் உடனே புரிந்து கொண்டதை நினைத்து மகிழ்ந்தான்.
ராஜேஷின் மனம் நினைத்தது…. இதை நீ எப்போது சொல்வாய் என்றுதானே காத்திருந்தேன்… அர்ஜூன்… உன்னருகில் நான் இருக்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் என் வாழ்வின் இன்பமான தருணங்கள்….
”நாளைக்கு காலைல 9 மணிக்கு நான் உன் வீட்டு காலிங் பெல்லை அழுத்துவேன்” ராஜேஷ் சொன்னான்.
“தாங்க்ஸ் ராஜேஷ்… நீ நாளைக்கு என் வீட்லதான் சாப்பிடணும்….” அர்ஜூன் அன்புக்கட்டளை இட்டான். ராஜேஷும் ஏற்றுக் கொண்டான்.
இருவரும் அவரவர் வீடுகளைச் சேர்ந்தனர். ராஜேஷின் மனம் சனிக்கிழமையை வெறுத்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்தது. ஞாயிறு (சூரியன்) மாலை மறைந்து மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வருவதற்காக அவன் காத்திருந்தான். அர்ஜூன், சனிக்கிழமை முழுதும் அப்படியும் இப்படியுமாக அலைந்தான். அவன் அறையை முடிந்தவரை தூய்மைப் படுத்தினான். அழகு செய்தான். என்ன விஷயங்களை எல்லாம் பேசுவது என பலமுறை யோசித்துப் பார்த்தான். எந்த சூழ்நிலையிலும் காதல், உடலுறவு பற்றிய விஷயங்கள் எழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என முடிவு செய்தான். அந்த விஷயங்கள் வந்தால் தன்னைப் பற்றிய ரகசியம் வெளியாகக் கூடும் என்ற பயம் அவனுக்கு இருந்தது. சற்றேறக்குறைய இதே முடிவை ராஜேஷும் எடுத்திருந்தான். மறுநாள் அர்ஜூன் வீட்டில் எந்த விஷயங்களைப் பேசினாலும் காதல் மற்றும் உடலுறவு பற்றி பேசக்கூடாது என்று.
ராஜேஷுக்கு டைரிக் குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. அவன் அறையில் இருந்த பீரோவின் லாக்கருக்குள் அந்த டைரி இருக்கும். அந்த லாக்கரின் சாவி இவனிடத்தில் தான் இருக்கும். எப்படியும் அவன் அறைக்குள் யாரும் வரவும் மாட்டார்கள் இவன் பொருட்களை யாரும் தொடவும் மாட்டார்கள். ஆனால் சில சமயங்களின் தன் நண்பர்கள் யாரேனும் பார்க்க நேரிடலாம் என அவன் ஜாக்கிரதையாக அதை லாக்கரில் வைப்பான். ஏனெனில், அந்த டைரியில் அவன் இதுநாள் வரை கண்டிருந்த கனவுகளை எழுதியிருந்தான். தான் யாருக்காக காத்திருந்தான் என எழுதியிருந்தான். சனிக்கிழமை இரவு டைரி எழுத அவன் அமர்ந்தான்.
டைரிக்குறிப்பு… மே மாதம் 17 2008. சனிக்கிழமை.
இன்றுதான் என் வாழ்வில் நான் மிகவும் சிரமப்பட்டு என் பொழுதைக் கழித்தேன். இது என்ன ஒரு இக்கட்டான உணர்வு. நான் என்ன எதிர்ப்பார்க்கிறேன் என எனக்கே தெரியவில்லை. ஒரு வாரத்திற்கு முன்புதான் பார்த்த அந்த அழகிய இளைஞன் என்னை ஏன் இவ்வளவு பாடு படுத்துகிறான் என தெரியவில்லை. அவனுக்கு இது போன்ற விஷயங்கள் பிடிக்குமா எனத் தெரியவில்லை…. பிடிப்பது இருக்கட்டும்… தெரியுமா எனக் கூடத் தெரியவில்லை… அப்படியிருக்க எந்த நம்பிக்கையில் என் மனம் அவன் மீது செல்கிறது. அவனிடத்தில் என் காதலை நான் சொல்லக் கூட வாய்ப்பு அமையாமல் போகலாம். என் மனம் புண்படப் போகிறதா…? அவன் மறுத்தலித்தால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிமா…? தெரியவில்லை. அர்ஜூன், நீ என்னை விரும்புவாயா…? உனக்கும் என்னைப் போன்ற ஆசைகள், எண்ணங்கள் இருக்குமா…? நான் இந்த மனப்போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சியில் தவிக்கிறேன். எப்போதும் செய்திராத ஒன்றை இப்போது செய்கிறேன். ஆம்… அழுகிறேன்… என் கண்களில் நீர்த்துளிகள் உன்னை எண்ணி வருகிறது. உன்னை என் வாழ்வின் இறுதி மூச்சு உள்ளவரை என்னருகிலேயே வைத்துக் கொள்ள என் மனம் துடிக்கிறது.”
இந்தக் குறிப்பு எழுதி முடிக்கும் போது அந்த டைரியின் பக்கங்களில் ராஜேஷின் கண்ணீர்த்துளிகள் சிந்தியிருந்தன…. அவன் டைரியை மூடி வைத்துவிட்டு ஞாயிற்றுக் கிழமை காலை வேளைக்காகக் காத்திருந்தான்….
அன்பே !
அந்த நிலவைப் பார்க்கும் போது
உனக்குப் பெண்முகம் ஏதேனும் தெரியும் – ஆனால்
எனக்கு உன்முகம் தானே தெரிகிறது.
உன் அடர்ந்த புருவங்கள்
அரும்பு மீசை
இதழின் சிவப்பு
பருவம் இழைந்த கன்னங்கள்
எல்லாம் தெரிகிறது.
என் வலிய தோள்களும்
பரந்த மார்பும் – உன்
அழகிய முகம் புதைந்து நீ
உறங்கிடத்தான் படைக்கப்பட்டன.
நீ என்னைக் காதலிப்பதாய்ச் சொல்
நான் உன்னை பிரபஞ்சத்தின்
தடுப்புகளைத் தாண்டி
இன்பப் பெருவெளியில்
இழுத்துச் செல்வேன்.
நாம் இருவர் மட்டும் இருப்போம் அங்கே
காதல் வீதியெங்கும் நம்
கனவுகளின் கடைத்தெருதான்.
நீ மட்டும் ஒருவார்த்தை சொல்
என்னைக் காதலிப்பதாய்……
(தொடரும்)…..
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.
-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 4
----------------------------------------------------------------------------------------------------------
ஞாயிற்றுக்கிழமை காலை ஞாயிறு வந்ததும் ராஜேஷ் தன் மயக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல், எழுந்து நின்றான். இன்று ஜாக்கிங் இல்லை… அதற்கு பதிலாக ஒரு நாள் முழுவதும் அர்ஜூனுடன் கழிக்கப் போகிறோம் என்ற இன்பம் அவனை ஆட்கொண்டது. அவன் காலைக் கடமைகளை எல்லாம் வேகவேகமாகச் செய்தான். சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டான். இன்னும் வேகமாக ஓடாத அந்த கடிகாரத்தை நொந்து கொண்டான்.
அர்ஜூனின் காலைப் பொழுது அதைவிட மெதுவாக நகர்வது போல இருந்தது. தன்னை மேலும் மேலும் அழகு படுத்திக் கொண்டாலும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என அவனுக்கு எண்ணியது. கண்ணாடி முன் பலமுறை நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டான்.
சேச்சே… இது என்ன….? அவன் என்னைப் பார்க்கத்தானே வருகிறான்… அதுகூட நட்பு ரீதியில்…. அதுவும் நான் அழைத்த்தால்…. அவன் ஒரு பேரழகு வாய்ந்த ஆண்மை ததும்பும் அழகன். அவன் என்னை எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை…
அர்ஜூன் தன் கண்கள் வலிக்க கண்ணீர் துளிகளை வடித்தான். தன் வாழ்வு ராஜேஷின் கைகளில் மட்டுமே இனிமையாக் கழியும் என அவன் நம்பினான். ஆனால் அதை வெளிக் காட்ட இந்த பிறவியில் அவன் எதுவும் முயலமாட்டான். அவனுக்கு அத்துனை துணிச்சல் இல்லை.
காலை ஒன்பது மணியாக பத்து நிமிடம். அர்ஜூன் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. அர்ஜூன் ஓடிச்சென்று கதவுகளைத் திறந்தான். ராஜேஷ் எனும் ஆணழகன் அங்கு நின்றிருந்தான். அர்ஜூனின் கண்கள் அவனை மீறி அகல விரிந்தன. வாய் திறந்து கொண்ட்து. ஆயினும் எப்படியோ சமாளித்துக் கொண்டான். ராஜேஷின் நிலைமையும் சற்றேறக்குறைய அதேபோல் தான். அழகுப் பெட்டகமாக இருந்த அர்ஜூனை அப்படியே அள்ளி அவன் செவ்விதழ்களைக் கவ்விச் சுவைக்க அவன் மனம் விரும்பியது. அவன் மார்பு ஏக்கத்தில் விம்மியது.
“உள்ள வா, ராஜேஷ்”… அர்ஜூன் அழைத்தான்.
ராஜேஷை கூடத்தின் வழியே மாடியை நோக்கி அழைத்துச் சென்றான். தன் அறையில் நுழையும் முன் ராஜேஷ் அதற்கு முன்பு இருந்த அறைக்குள் நுழைந்தான். அது அர்ஜூனின் பெற்றோர் வாழ்ந்த அறை. அர்ஜூன் ராஜேஷின் பின்னாலேயே சென்று அந்த அறைக்குள் நுழைந்தான்.
ராஜேஷ் அந்த அறையில் இருந்த அர்ஜூனின் பெற்றோர் படங்கள் முன் நின்றான். திரும்பி அர்ஜூனைப் பார்த்தான்.
“அவங்க என் அம்மா அப்பா”… அர்ஜூன் சொன்னான்.
ராஜேஷின் மனம் ஒரு நொடி நெருப்பைத்தொட்டவனைப் போல் பதறியது. அவன் திரும்பி அர்ஜூனைப் பார்த்தான். அர்ஜூன் அடுத்த அறை மணி நேரத்தில் அவன் வாழ்க்கையின் பழைய நிகழ்வுகளை எல்லாம் ராஜேஷிடம் பகிர்ந்து கொண்டான். இடையிடையே அவன் கதறி அழவும் செய்தான். தன் தாயின் வேதனைகளைப் பகிர்ந்து கொண்ட போது அவன் மிகவும் வேதனைக்குள்ளானான்.
ராஜேஷ் ஒவ்வொருமுறை அர்ஜூன் அழுத போதும், புண்பட்டுப்போனான். அர்ஜூனின் மீது அளவிட இயலா அன்பும் காதலும் அவனுக்கு பெருகியது. வாழ்வில் யாருமில்லா தனிமரமாய் வாழும் அவனுக்கு தான் பெரும் ஆதரவாக இருக்க வேண்டும் அவன் ஏக மனதாய் முடிவு செய்தான். அர்ஜூன் அழுத போதெல்லாம் ஓடிச்சென்று அவனை அணைத்து தன் மார்போடு கிடத்தி அவனுக்கு ஆறுதல் தர வேண்டும் என விரும்பினான். அவன் கண்ணீர் துளிகளைத் துடைத்து ‘உனக்கு நானிருக்கிறேன்’ என சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு பெருகியது. தனக்கு தாய் தந்தை இல்லையென்றாலும் அண்ணன்மார் இருக்கிறார்கள். ஒரு பெயரளவிற்காவது இருக்கிறார்கள். ஆனால் அர்ஜூனோ தனிமையில் யாருமின்றி வயதான பாட்டி மட்டுமே ஆதரவாக இருக்க எவ்வளவு வேதனையில் இருக்கிறான். இப்போதுதான் அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, அர்ஜூன் ஏன் எப்போதும் ஒரு சோகத்திலேயே இருக்கிறான் என்று.
“அர்ஜூன், நீ எதற்காகவும் இனி வருத்தப்படக் கூடாது… உனக்கு நல்ல நண்பனாக நான் இருக்கிறேன். இனி உன்னை விட எனக்கு எதுவும் பெரிதில்லை… இனி ஒவ்வொருநாள் மாலையும் நான் உன்னுடன் தான் இருப்பேன்…. என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” ராஜேஷ் கேட்டான்…
“ராஜேஷ்…. நீ இந்த கேள்வி கேட்கவே வேண்டியதில்லை… அது நான் செய்த பெரும் பாக்கியம். இந்த உலகில் தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு உன் நட்பு மட்டுமே ஒரு பிடிப்பாக அமையும்”.. அர்ஜூனின் கண்களில் கண்ணீரின் தடங்கள்.
ராஜேஷும் அர்ஜூனும் அன்று முழுதும் பேசிக்கொண்டே இருந்தனர். பலப்பல விஷயங்களைப் பேசினர். ராஜேஷ் அர்ஜூனைப் புரிந்து கொண்டான். அர்ஜூன் ராஜேஷைப் புரிந்து கொண்டான். இருவரும் நட்பின் பரிமாணங்களை அளந்தனர். அர்ஜூன் சிரித்தான். என்றும் தன் வாழ்வில் சிரிக்காத அளவிற்குச் சிரித்தான். ராஜேஷின் இயல்பான உரிமையான நட்பில் அவன் அகமகிழ்ந்து முகமகிழ்ந்து சிரித்தான். அவன் சிரிக்கச் சிர்க்க ராஜேஷின் மனம் சலனத்தில் அழுந்தியது. அர்ஜூனின் அழகான சிரிப்பிற்காக ராஜேஷ் பலப்பல சாகசங்களைச் செய்தான். அர்ஜூன் சிரித்த போது ராஜேஷின் உறுதியான வைர நெஞ்சம் நெருப்பிலிட்ட நெய் போல உருகியது. அவன் ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான். அவன் சிரித்தபோது அந்த அழகிய முகத்தில் எழுந்த பேரொளி ராஜேஷை விட்டில் பூச்சி போல் கவர்ந்திழுத்தது. அந்த இன்பத்தில் ராஜேஷ் நனைந்தான். அர்ஜூனை தன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உறுதியாக ஏற்பட்டது. அவன் காத்திருக்க முடிவு செய்தான், வாய்ப்பு வரும் வரை….
அர்ஜூன் ராஜேஷ் அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும் தன் வாழ்வில் என்றும் அனுபவித்திராத ஒரு அமைதியை, நிம்மதியை, இன்பத்தை, பாதுகாப்பை உணர்ந்தான். இந்த உறுதியான ஆணின் கைகளில் தான் அடைக்கலம் ஆக வேண்டும் என்ற அவா அவனுக்கு ஏற்பட்டது. தன் வாழ்நாள் முழுதும் இவனுடனேயே கழிக்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் தான் எதையும் சொல்ல இயலாத நிலையில் அவன் இருந்தான். தவறான கருத்துக்கள் அவனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும். ராஜேஷின் நட்பைக்கூட இழக்க நேரிடலாம். அவன் அதை விரும்பவில்லை. இப்பொதைக்கு கிடைத்தற்கரிய பெரும் பாக்கியமாக ராஜேஷின் நட்பு கிடைத்துள்ளது.
இருவரும் நேரமாகிவிட்டதை உணர்ந்தனர். மாலை எனும் வேளை வந்து அவர்களைப் பிரிக்க ஆயத்தமானது. ராஜேஷும் அர்ஜூனும் ஒருவருக்கொருவர் செல் போன் எண்களைப் பரிமாறிக்கொண்டனர். கடைசியாக இருவரும் அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர்.
“அர்ஜூன், நீ எப்போதும் இனிமே கலங்கக்கூடாது. நீ இனிமே என் ஃப்ரெண்ட். அத மறந்துடாத…” ராஜேஷ் பேசிக்கொண்டே அர்ஜூனின் அருகில் வந்தான். அவனுடைய கைகள் அர்ஜூனின் முகத்தை ஏந்தின. அர்ஜூன் இதயம் மார்புக்கூட்டைப் பிய்த்தெறிவது போல் துடித்தது. ராஜேஷ் அர்ஜூனின் உச்சி முகர்ந்தான். அது முழுக்க முழுக்க நட்பு ரீதியிலான முத்தம் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது.
“பை அர்ஜூன்…” ராஜேஷ் சென்றுவிட்டான்.
அர்ஜூன் வெகுநேரம் அந்த முத்தமிடப்பட்ட இடத்தை தடவிக்கொண்டே இருந்தான். அது தன் இதழாக இல்லையே என்ற வருத்தம் அவனுக்கு இல்லாமலில்லை. முத்தமிடப்பட்ட இடம் இன்னும் சூடாக ஈரமாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. ராஜேஷின் இதழ்கள் தன் நெற்றியில் பதிந்த அந்த நொடிகளை எண்ணி அவன் உள்ளம் பெருமூச்செறிந்தது. சற்று முகம் தூக்கி அவன் இதழ்களை காட்டாமல் போனதாக தன்னைத் தானே நொந்துகொண்டான்.
தனது மொபைல் போனை எடுத்தான். ஏற்கனவே இரண்டு தகவல்கள் வந்திருப்பதைக் கண்டான். அதை பிரித்ததும் அது ராஜேஷிடமிருந்து வந்த தகவல்கள் என அறிந்து கொண்டான்.
முதல் தகவல்:
“ஹாய்… டியர்… என்ன பண்ற?”
இரண்டாம் தகவல்:
”சாப்டாச்சா?”
முதலாவதாக தன்னை ராஜேஷ் டியர் என அழைத்ததை எண்ணி புளகாங்கிதம் அடைந்தான். தன் மீது அவன் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தான் என நினைத்து மகிழ்ந்தான். ஆனால், இந்த அக்கறை உண்மையான அக்கறைதானா என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தைத் தீர்க்கும்படியான ஒரு சம்பவம் கூடியவிரைவில் நிகழப்போவதை அவன் அறிந்திருக்கவில்லை…
காதலெனும் கடைத்தெருவில் எனக்கு
முத்தங்கள் விற்றவனே….!
நீ, சூடான இதழ் பதித்து என்
வாடா மலரான வதனத்தைச்
சுவைத்தாயே… தேடாமல் கிடைத்த
தேன் போல நீ வண்டாய் மாறி
குடித்தாயே…. நாடாமல் என்னை
நலிவு கொள்ளச் செய்வாயோ என்ற
எண்ணம் என் உள்ளத்தில் எழுந்து
உன்னைக் கண்டாலே போதும்
காதல் தரவில்லையென்றாலும் என
தனக்குத் தானே ஆறுதல் சொல்லும்.
என் காதலா…!
நெற்றியில் முத்தமிட்டாய்
நெருப்பு மூட்டிவிட்டாய்
என் இதழ்களை எடுத்துக்கொண்டு
இன்பம் வழங்கமாட்டாயா..?
(தொடரும்)…..
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.
No comments:
Post a Comment